2017-11-07 16:37:00

ஐரோப்பாவின் வருங்காலம் குறித்த தொடர் கலந்துரையாடல்


நவ.07,2017. ஐரோப்பாவிலுள்ள மதத் தலைவர்களுடன் இச்செவ்வாயன்று, ஐரோப்பிய அவையின் உயர்மட்டக் குழுவின் பிரதிநிதிகள் கூடி, ஐரோப்பாவின் வருங்காலம் குறித்து விவாதித்தனர்.

உயர் மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்ட, ஆக்கப்பூர்வமான ஒன்றிப்பை ஐரோப்பிய சமுதாயத்தில் கொணர்வது குறித்து ஐரோப்பிய அவையின் முதன்மைத் துணைத்தலைவர், Frans Timmermans அவர்கள் விடுத்த அழைப்பின் பேரில் ஐரோப்பிய மதத்தலைவர்கள் கலந்துகொண்ட இக்கூட்டம், ஐரோப்பிய பாராளுமன்ற துணைத்தலைவர், Mairead McGuinness அவர்கள் முன்னிலையில் இடம்பெற்றது.

ஐரோப்பாவின் வருங்காலம் குறித்த தொடர் கலந்துரையாடல்களின் ஒரு பகுதியாக, இச்செவ்வாயன்று இடம்பெற்ற இந்த 13வது உயர்மட்ட ஆண்டுக்கூட்டத்தில் கலந்துகொண்ட மதத்தலைவர்கள், ஐரோப்பிய ஒன்றிப்பு, குடியரசு வழிமுறைகள், நிர்வாகம், மதிப்பீடுகள் போன்றவை குறித்த ஆலோசனைகளை வழங்கினர்.

ஐரோப்பாவின் மனிதாபிமான அணுகுமுறைகள், சமூக, மற்றும் சுற்றுச்சூழல் கூறுகள் போன்றவை குறித்தும் வலியுறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.