2017-11-07 15:34:00

அன்புகூரப்படுகிறோம் என்ற உணர்வு இழக்கப்படாதிருக்க...


நவ.07,2017. நாம் அன்புகூரப்படுகிறோம் என்ற உணர்வை இழப்போமானால், நாம் அனைத்தையும் இழந்தவர்களாகிவிடுவோம் என இச்செவ்வாய் காலை திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இச்செவ்வாய்க்கிழமையின் திருப்பலி நற்செய்தி வாசகம் எடுத்துரைத்த பெரிய விருந்து உவமை குறித்து தன் கருத்துக்களை, சாந்தா மார்த்தா இல்ல திருப்பலியில் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, விருந்துக்கு அழைக்கப்பட்ட பலர், வெவ்வேறு காரணங்களைக் கூறி அவ்வழைப்பை மறுத்ததுபோல், நாமும் இறைவனின் அழைப்பை புரிந்து கொள்ளாமல் அனைத்தையும் இழந்துவருகிறோம் என்றார்.

கடவுளின் அழைப்பு இலவசமானது, அதற்கு நாம் உடலளவிலும், மனதளவிலும் தேவையுடையவர்களாக இருக்கவேண்டும் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அழைப்பு இலவசம் எனினும், நாம் குணம் பெறுவதற்கு நம் அன்பு தேவைப்படுகின்றது என்றார்.

கோவிலுக்குச் செல்கின்றேன், அதனால் மீட்பிற்கு தகுதியுடையவன், என்பதுபோல் பேரம் பேசும் நிலையல்ல, இறை மனித உறவு, மாறாக, இறைவன் வழங்கும் மீட்புக்கு நம் இதயத்தையே முற்றிலுமாக வழங்க வேண்டும் எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

அனைத்தையும் நமக்கு இலவசமாக வழங்கும் இறைவன், நம்மிடம் கேட்பதெல்லாம், நம் அன்பையும், அவர் மீதான விசுவாசத்தையுமே என தன் மறையுரையில் மேலும் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.