2017-11-06 16:20:00

புனித சார்ல்ஸ் பொரோமெயோ திருவிழா மறையுரை


நவ.06,2017. அதிகாரத்திலிருப்போரின் அநீதமான நடவடிக்கைகளிலிருந்து தன் மக்களைக் காப்பாற்ற உழைத்த புனித சார்ல்ஸ் பொரோமெயோவின் எடுத்துக்காட்டு, நம் ஒவ்வொருவருக்கும் உதவுவதாக என்று, இத்திங்கள் திருப்பலியில் மறையுரை வழங்கினார், திருப்பீட சமூகத் தொடர்புத்துறையின் தலைவர், அருள்பணி தாரியோ எதுவார்தோ விகனோ.

கடந்த சனிக்கிழமையன்று திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட புனித சார்ல்ஸ் பொரோமெயோவின் திருவிழாவைச் சிறப்பிக்கும் விதமாக, அவர் வாழ்ந்த இல்லத்தில் தற்போது இயங்கிவரும் திருப்பீடத்திற்கான இத்தாலியத் தூதரகத்தின் பணியாளர்களுக்கு இத்திங்களன்று திருப்பலியாற்றி மறையுரை வழங்கிய அருள்பணி விகனோ அவர்கள், இறைவனின் வாக்குறுதிகள் நிலையானவை, தொடர்ந்து நிறைவேற்றப்படுபவை என்று கூறினார்.

நாம் இழந்த மாண்பை, தன் மகன் வழியாக நமக்கு இறைவன் பெற்றுத் தந்துள்ளார் எனவும் கூறிய அருள்பணி விகனோ அவர்கள், இறைவனின் பிள்ளைகளாக நாம் பெற்றுள்ள மாண்பு, நமக்கு நம்பிக்கை வழங்குவதாகவும் உள்ளது என்று தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

ஒவ்வொருவரும் தாழ்ச்சியுள்ளவர்களாக செயல்படவேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்த, திருப்பீட சமூகத் தொடர்புத்துறையின் தலைவர், இறைவனின் வாக்குறுதிகளை நம்புவதும், ஏற்பதும் மட்டும் போதாது, அவ்வாக்குறுதிகள் நிறைவேறும் என்பதன் சாட்சிகளாக நாம் செயல்படுவதும் அவசியம் என்று வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.