2017-11-06 15:25:00

பாசமுள்ள பார்வையில்.. பிள்ளையின் கேள்வியால் திணறும் தாய்


குட்டி ஒட்டகம் ஒன்று, தனது தாய் ஒட்டகத்திடம் ஓயாமல் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கும். அப்படித்தான் ஒரு மாலைப்பொழுதில் குட்டி ஒட்டகம்,  தாய் ஒட்டகத்திடம், அம்மா! நமக்கு மட்டும் முதுகில் திமில் இருக்கே, ஏன்? என்றது. அதற்கு தாய் சொன்னது - நாமெல்லாம் இயல்பாகப் பாலைவனத்தில் வாழ்பவர்கள். நமக்கு தண்ணீர் தினம் தினம் கிடைக்காது. பாலைவனச் சோலைகளில் மட்டும்தான் கிடைக்கும். அதனால், கிடைக்கும் தண்ணீரை முடிந்தளவு நம் உடம்பில் சேமித்துக்கொண்டால் தண்ணீர் கிடைக்காத பாலைவனத்தில் பயன்படுத்திக் கொள்வதற்குத்தான் இயற்கை திமிலைக் கொடுத்திருக்கிறது என்று. சரி, நமக்கு கண் இமை கெட்டியாக இருக்கிறது, மூக்கை மூடிக்கொள்ள மூடி இருக்கிறது, மற்ற மிருகங்களுக்கு அப்படி ஏன் இல்லை? என்றது குட்டி ஒட்டகம். தாய் சொன்னது - பாலைவனத்தில் மணல் புயல் அடிக்கும், கண்ணிலும் மூக்கிலும் மணல் புகுந்துவிடும். அதனால்தான் நமக்கெல்லாம் இப்படி மூடி இருக்கின்றது என்று. சரி, நமக்கு இவ்வளவு பெரிய கால் குளம்பு எதற்கு? என்று கேட்டது குட்டி ஒட்டகம். மணலில் நடக்கும்போது நம் கால் மணலில் புதையாமல் நடக்கத்தான் என்று பொறுமையாகப் பதில் சொன்னது அம்மா ஒட்டகம். குட்டி ஒட்டகமும் கேள்வியை நிறுத்தவில்லை. அம்மா, பல்லும், நாக்கும் இவ்வளவு கெட்டியாக நமக்கு இருக்கின்றனவே, ஏன்? என்றது. அம்மா ஒட்டகம் சொன்னது - பாலைவனத்தில் செடி கொடியெல்லாம் முரட்டுத்தனமாக இருக்கும். அதையெல்லாம் கடித்துச் சவைத்துத் தின்ன வேண்டாமா? அதற்குத்தான் என்றது. இப்போது குட்டி ஒட்டகம், அம்மா! இவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு இந்த மிருகக்காட்சி சாலையில், நாம் இருவரும் என்ன செய்துகொண்டிருக்கின்றோம்? என்று கேட்டது. அப்போது தாய் ஒட்டகம், ஒவ்வொருவரும் அவரவருக்கு உரிய இடத்தில் இருந்தால் எல்லாமே நலமாக அமையும், நமக்கு அது கிடைக்கவில்லை என்று கூறியது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.