2017-11-06 15:45:00

திருத்தந்தை : இறைவனின் கொடைகள் திரும்பப் பெறப்படுவதில்லை


நவ.06,2017. கடவுள் வழங்கும் கொடைகள் திரும்பப் பெறப்படுவதில்லை, அதுபோல், அவரின் அழைப்பும் எப்போதும் உயிரூட்டமுடையதாக உள்ளது என, இத்திங்கள் காலை திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இத்திங்கள் காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனின் மீட்பு வரலாற்றில் கொடைகளும் அழைப்பும் நிரம்பிக் கிடக்கின்றன, அவை நம் ஒவ்வொருவருக்குமானவை எனக் கூறினார்.

கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்ட நம் ஒவ்வொருவரும், இறைவனின் வாக்குறுதிகளை ஏற்று, அவருடன் உடன்பாடு கொண்டுள்ளோம் என்று தன் மறையுரையில் கூறியத் திருத்தந்தை, நம் தேர்வு என்பது சந்தர்ப்பவசத்தால் இடம்பெற்றதா?, நம் வாக்குறுதிகளுக்கு இயைந்தவகையில் வாழ்கின்றோமா?, இறைவனோடு நாம் கொண்டுள்ள உடன்பாட்டிற்கு விசுவாசமாக உள்ளோமா என்ற கேள்விகள் நமக்குள்ளேயே கேட்கப்பட வேண்டும் என்றார்.

இறைவனால் தேர்ந்துகொள்ளப்பட்ட நாம் ஒவ்வொருவரும், நம் பாவத்தால், கீழ்ப்படியாமையால், அவரிடமிருந்து விலகிச் செல்லும்போது, இறைஇரக்கம் நம்மை நெருங்கி வந்து, நம்மை இறைவனிடமே திருப்பி அழைத்து வருகிறது, ஏனெனில், இறைவனின் கொடைகளும் அழைப்பும் ஒரு நாளும் திரும்பப் பெறப்படுவதில்லை என மேலும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.