2017-11-06 16:10:00

அன்பு, எளிமை வழியாக சான்று பகர்ந்த 'புன்னகை சகோதரி'


நவ.06,2017. மேலும், கடந்த சனிக்கிழமையன்று, இந்தியாவின் இந்தூர் நகரில், அருள்சகோதரி இராணி மேரி வட்டாலில் அவர்கள், அருளாளராக அறிவிக்கப்பட்டது குறித்தும், மூவேளை செப உரையின் இறுதியில் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

'தன் அன்பு மற்றும் எளிமை வழியாக, கிறிஸ்துவுக்குச் சான்று பகர்ந்த அருள்சகோதரி இராணி மேரியின் தியாகம், குறிப்பாக, இந்திய மண்ணில் விசுவாசம் மற்றும் அமைதியின் விதையாக உள்ளது என்றுரைத்த திருத்தந்தை, இரக்கம் நிறைந்தவராக வாழ்ந்த அச்சகோதரியை, 'புன்னகை சகோதரி' என மக்கள் அழைத்து வந்ததையும் சுட்டிக்காட்டினார்.

கடந்த சனிக்கிழமையன்று காலையில், இந்தூர் நகரின் புனித பவுல் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புனிதர் பட்ட வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவர், கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ அவர்கள் தலமையில், இந்தியாவின் நான்கு கர்தினால்கள், எண்ணற்ற ஆயர்கள், குருக்கள், துறவியர் மற்றும் பொதுநிலையினர் கலந்துகொண்ட திருப்பலியில், இறையடியார் இராணிமேரி வட்டாலில் அவர்கள், அருளாளராக அறிவிக்கப்பட்டார்.

1995ம் ஆண்டு அச்சகோதரியை 54 முறைகள் கத்தியால் குத்திக் கொலை செய்து, பின் ஆயுள் தண்டனைப் பெற்று, மனந்திருந்திய சமந்தர் சிங் என்பவரும், இத்திருப்பலியில் கலந்துகொண்டார்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.