2017-11-04 14:58:00

Sixt நிறுவனத்தின் பிறரன்பு பணிகளுக்கு திருத்தந்தை பாராட்டு


Sixt என்ற ஐரோப்பிய பன்னாட்டு வாடகை வாகன நிறுவனத்தின் ஏறத்தாழ 300 பிரதிநிதிகளை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்வேறு சூழல்களில் தேவையில் இருக்கும் சிறாருக்கு Sixt நிறுவனத்தினர் ஆற்றிவரும் பிறரன்புப் பணிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

தனிப்பட்ட மற்றும் நிதி சார்ந்த வெற்றிகளையும் விடுத்து, இந்த உலகின் நலன்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில், அவற்றை அதிகரிப்பதற்கு, இந்நிறுவனத்தார் எடுத்துவரும் முயற்சிகளை ஊக்கப்படுத்திய திருத்தந்தை, சமூகத்தில் மிகவும் நலிந்த சகோதர, சகோதரிகள்மீது தனிப்பட்ட அன்பு கொண்டிருக்கும் பேதுருவின் வழிவருபவரைச் சந்திக்க வந்திருப்பது குறித்து மகிழ்வதாகவும் கூறினார்.

தெளிவான திட்டங்கள் வழியாக, சமூகத்தில் மிகவும் நலிந்த மக்களின் கண்ணீரைத் துடைப்பது, தூக்கியெறியும் கலாச்சாரத்திற்கு எதிராய்ச் செயல்பட்டு, மேலும் மனிதம்  நிறைந்த ஒரு சமுதாயத்தை அமைப்பதற்கு உதவும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நம் அக்கறையும், ஆதரவும் தேவைப்படும் அப்பாவி சிறாரின் முகங்களில், இறைவனின் கனிவான அன்பைக் காண இயலும் என்ற உறுதியில், இந்நிறுவனத்தினர் ஆற்றும் பணிகளைத் தான் ஊக்குவிப்பதாகத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆண்டவர் ஏராளமான கொடைகள் வழியாக இந்நிறுவனத்தினரை ஆசீர்வதிப்பாராக என்றும் வாழ்த்தினார்.

Sixt  ஐரோப்பிய பன்னாட்டு வாடகை வாகன நிறுவனம், 105க்கும் மேற்பட்ட நாடுகளில் ஏறத்தாழ நான்காயிரம் இடங்களில் தன் கிளை நிறுவனங்களைக் கொண்டு இயங்கி வருகின்றது. ஜெர்மனி, ஆஸ்ட்ரியா, சுவிட்சர்லாந்து, இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இதுவே, மிகப்பெரிய வாடகை வாகன நிறுவனமாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.