2017-11-03 13:53:00

"நாட்டை குணப்படுத்தும் ஞாயிறு" - பிலிப்பீன்ஸ் ஆயர்கள்


நவ.02,2017. பிலிப்பீன்ஸ் நாட்டு ஆயர்கள், நவம்பர் 5, வரும் ஞாயிறை, "நாட்டை குணப்படுத்தும் ஞாயிறாக" அறிவித்துள்ளனர்.

"இறைவா, எங்கள் நாட்டை குணமாக்கும்" என்ற விருது வாக்குடன், தலைநகர் மணிலாவில் நடைபெறவிருக்கும் ஒரு செப ஊர்வலத்தில் கத்தோலிக்கர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று, பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

ஃபெர்டினாண்ட் மார்க்கோஸ் அவர்களின் ஆட்சியை முடிவுக்குக் கொணரும் வகையில், 1986ம் ஆண்டு, மக்கள் சக்தி என்ற புரட்சி உருவான வேளையில், ஊர்வலம் நடத்தப்பட்ட அதே சாலையில், நவம்பர் 5ம் தேதி, செப ஊர்வலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1986ம் ஆண்டு, புரட்சி ஊர்வலத்தில் மக்கள் சுமந்து சென்ற பாத்திமா அன்னையின் அதே திரு உருவம் மீண்டும் ஒருமுறை சுமந்து செல்லப்படும் என்றும், இந்த செப ஊர்வலம் தற்போதைய அரசை கவிழ்க்கும் முயற்சி அல்ல என்றும் பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் சாக்ரடீஸ் வியேகாஸ் அவர்கள் கூறியுள்ளார்.

இந்த ஊர்வலத்தில் கலந்துகொள்ள பல்வேறு கிறிஸ்தவ அமைப்புக்கள் விருப்பம் தெரிவித்துள்ளன என்று UCA  செய்தி கூறியுள்ளது.

2016ம் ஆண்டு ஜூன் மாதம் Rodrigo Duterte அவர்கள் பிலிப்பீன்ஸ் நாட்டின் அரசுத்தலைவராகப் பொறுப்பேற்றபின் மேற்கொண்ட போதைப்பொருள் ஒழிப்பு போரில், இதுவரை 12000த்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று மனித உரிமை இயக்கங்கள் கூறிவரும் வேளையில், இதுவரை 6000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது என்று UCA செய்தி கூறியுள்ளது.

ஆதாரம் : UCAN    / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.