2017-11-03 14:34:00

இறந்த கர்தினால்கள், பேராயர்கள், ஆயர்கள் நினைவுத் திருப்பலி


நவ.03,2017. இந்த உலகில், கடவுளோடு அல்லது அவரைவிட்டு விலகி இருக்கும் ஒரு வாழ்வைத் தேர்ந்து கொள்வதற்கு, ஒரு முக்கியமான தீர்மானம் எடுக்க வேண்டிய நிலைக்கு, மரணம் நம்மை உட்படுத்துகின்றது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளி காலையில் மறையுரையாற்றினார்.

கடந்த ஆண்டு அக்டோபர் முதல், இவ்வாண்டு அக்டோபர் வரை திருஅவையில் இறந்த கர்தினால்கள், பேராயர்கள் மற்றும் ஆயர்களின் நினைவுத் திருப்பலியை, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில், இவ்வெள்ளி முற்பகல் 11.30 மணிக்கு நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திருப்பலியின் வாசகங்களை (தானி.12,1-3; யோவா.6,51-58) மையப்படுத்தி  மறையுரையாற்றினார்.

இறந்தோர் உயிர்ப்பில் நாம் அறிக்கையிடும் விசுவாசம், நம்மை நம்பிக்கையுள்ள மனிதர்களாக ஆக்குகின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.

திருஅவைக்கும், தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களுக்கும் சேவையாற்றி, இறைவனில் துயில்கொள்ளும் கர்தினால்களையும், ஆயர்களையும் இன்று நாம்    நினைவுகூர்ந்து, நற்செய்திக்கும், திருஅவைக்கும், அவர்கள் தாராளமனத்தோடு பணியாற்றியதற்கு நன்றி கூர்கின்றோம் என்றுரைத்த திருத்தந்தை, எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது என்ற புனித புவலடிகளாரின் வார்த்தைகளை, இறந்த இவர்கள் கூறுவதை நாம் கேட்பதுபோன்று உள்ளது என்றும் கூறினார்.

உண்மையில், கடவுள் பிரமாணிக்கமுள்ளவர், நாம் அவரில் வைத்திருக்கும் நம்பிக்கை வீணாய்ப் போகாது என்றும், இறந்த  கர்தினால்கள் மற்றும் ஆயர்களின் ஆன்மாக்கள் நிறைசாந்தி அடையச் செபிப்போம் என்று சொல்லி, மறையுரையை நிறைவு செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நற்செய்தி அறிவிப்பு பேராயத்தின் முன்னாள் தலைவரான கர்தினால் ஐவன் டயஸ் 2017ம் ஆண்டு ஜூன் 19ம் தேதியும், பிலிப்பைன்சின் செபு உயர்மறைமாவட்ட முன்னாள் கர்தினால் ரிக்கார்தோ விதால் அவர்கள், 2017ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதியும் காலமானார்கள். இந்த இரு ஆசிய கர்தினால்கள் உட்பட 14 கர்தினால்கள், 2016ம் ஆண்டு அக்டோபர் முதல், 2017ம் ஆண்டு அக்டோபர் வரை இறந்துள்ளனர். மேலும், இந்தியாவின் மதுரை முன்னாள் பேராயர் பீட்டர் பெர்னான்டோ (டிச.31,2016), சிவகங்கை முன்னாள் ஆயர் எட்வர்ட் பிரான்சிஸ் (ஏப்.11,2017), கோட்டயம் சீரோ-மலபார் முன்னாள் பேராயர் குரியாகோஸ் குன்னச்சேரி, இலங்கையின் குருனகேலா முன்னாள் ஆயர் அந்தோனி பெய்ரிஸ், மீரட் முன்னாள் ஆயர் பாட்ரிக் நாயர், ஜபல்பூர் முன்னாள் ஆயர் மாத்யூ தன்னிக்குன்னல், காஞ்சிரப்பள்ளி சீரோ-மலபார் முன்னாள் ஆயர் மாத்யூ வட்டக்குழி உட்பட, 137 பேராயர்கள் மற்றும் ஆயர்கள், இக்காலக்கட்டத்தில் இறந்துள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.