2017-11-01 15:27:00

பாசமுள்ள பார்வையில்...– கேள்விகளுக்குள் அடங்குவதில்லை பாசம்


அழுது அழுது அவன் கண்களெல்லாம் வீங்கியிருந்தன. ஐம்பது மைல்களுக்கு அப்பாலிருந்து, அந்த ஊர் திருவிழாவுக்கு, அந்த ஐந்து வயது சிறுவன், தன் தாத்தா பாட்டியுடன் வந்திருந்தான். ஒரு சிறு வீட்டில், ஓர் அறையை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார்கள். தாத்தாவோ, திருவிழா வாண வேடிக்கையை அருகில் நின்று பார்க்க, கோவில் பக்கம் சென்றுவிட,  இவன் அறையில் தூங்கிக் கொண்டிருந்தான். பாட்டியோ, வீட்டிற்கு வெளியே மண்ணில் அமர்ந்து, அந்த வீட்டுக்கார அம்மாவிடம் உரையாடிக் கொண்டிருந்தார். திடீரென்று விழித்துப் பார்த்த அவனுக்கு,  வீட்டிற்குள் யாரும் இல்லாதது, அச்சத்தை எழுப்பியது. பாட்டி,  என்று கூப்பிட்டுப் பார்த்தான். பேசிக்கொண்டிருந்த பாட்டியின் காதுகளில் அது விழவில்லை. வீட்டை விட்டு வெளியே வந்த அவன், வழியில் இருந்த ஒவ்வொரு முகமாகப் பார்த்துக்கொண்டே பாட்டியைத் தேடினான். இதைப் பாட்டியும் கவனிக்கவில்லை; வெளியே அமர்ந்திருந்த பாட்டியை அவனும் பார்க்கவில்லை. சிறிது தூரம் சென்ற அவனுக்கு, பயம் பற்றிக் கொண்டது. இந்த இரவில், அதுவும், இந்த பெரிய திருவிழாக் கூட்டத்தில் தாத்தா, பாட்டியை எங்கு போய் தேடுவது என திணறினான். வீட்டுக்கே திரும்பிவிடலாம் என்றால், அதற்கும் வழி தெரியவில்லை. அங்கேயே நின்று, அம்மா, அம்மா,  என அழத் தொடங்கினான் அந்த சிறுவன். அழுது அழுது முகம் வீங்கிப்போன நிலையில், அங்கேயே தூங்கிப்போன அவனை இரு கரங்கள் தூக்கின. அவனது பாட்டிக்கு சிறிது தூரத்தில் அவனை படுக்க வைத்துவிட்டு, அமைதியாகச் சென்றன அக்கரங்கள். அவன் கண் விழித்துப் பார்த்தால், அவன் பாட்டிதான் தெரிவார்கள் என்ற நிலையில் அவன் படுக்க வைக்கப்பட்டிருந்தான். திடீரென அழுதுகொண்டே கண்விழித்தான் அவன். அவன் பாட்டியும் அவனைப் பார்த்தார். ஓடிச்சென்று அவனை அரவணைத்துக் கொண்டார். பாட்டிக்கு ஆச்சரியமாக இருந்தது. தான் கண்விழித்து பாட்டியைத் தேடியதையும், கூட்டத்திற்குள் சென்று, அம்மா, அம்மா என அழுது அங்கேயேத் தூங்கி விட்டதையும் சொன்னான் பேரன். தன் பேரன் எப்படி தனக்கு முன் தரையில் வந்து படுத்தான், அல்லது யார் தூக்கி வந்து போட்டார்கள் என்பது, பாட்டிக்கு இன்னும் புரியாத புதிராகவே இருந்தது. இவனைப் பெற்று, தன் கையில் போட்டுவிட்டு இறந்துபோன தன் மகள்தான் இவனைத் தூக்கி, இங்கு கொண்டுவந்து போட்டிருக்க வேண்டும் என இன்னும் நம்புகிறார் அந்த பாட்டி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.