2017-11-01 15:53:00

நியூ யார்க் நகர் தாக்குதல் குறித்து அமெரிக்க ஆயர்கள்


நவ.01,2017. நியூ யார்க் நகரில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் நம் உள்ளங்களை பாரமாக அழுத்துகிறது என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் டேனியல் டினார்டோ அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

மதியற்ற தாக்குதலுக்கு மீண்டும் ஒருமுறை உள்ளாகியிருக்கும் நியூ நகரில் வாழும் அனைவரும் தங்கள் வேறுபாடுகளை புறந்தள்ளி, அன்பிலும், செபத்திலும், நம்பிக்கையிலும் இணைந்து வரவேண்டும் என்று, நியூ யார்க் பேராயர், கர்தினால் டிமோத்தி டோலன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

அக்டோபர் 31, இச்செவ்வாய் பிற்பகலில், நியூ யார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியில், கனரக வாகனம் கொண்டு நடைபாதையில் இருந்தோர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர் மற்றும் 12 பேர் காயமுற்றனர்.

இந்தத் தாக்குதலை மேற்கொண்ட உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த Sayfullo Saipov என்ற 29 வயது இளையவரை காவல் துறையினர் கைது செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நியூ யார்க் நகரில் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பலியானோர், மற்றும் அவரது குடும்பத்தினருடன் நம் எண்ணங்களால், செபங்களால் இணைந்திருப்போம் என்ற செய்தியை, அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

2001ம் ஆண்டு, செப்டம்பர் 11ம் தேதி, தீவிரவாத தாக்குதல்களுக்கு இலக்கான உலக வர்த்தக கோபுரங்கள் அமைந்திருந்த பகுதிக்கருகே இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.