2017-11-01 15:19:00

சிறப்பு மூவேளை செப உரை : இறை ஒளியை பிரதிபலிக்கும் புனிதர்கள்


நவ.01,2017. அனைத்துப் புனிதர்களின் விழாவான இப்புதன், இத்தாலி நாட்டிற்கு விடுமுறை நாள் என்பதால், திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை இடம்பெறவில்லை. அதற்குப் பதிலாக, பெருவிழாக் காலங்களின்போது அவர் வழங்கும் மூவேளை செப உரை இடம்பெற்றது. நண்பகல் 12 மணிக்கு வழங்கிய அந்த மூவேளை செப உரையில், இயேசுவின் மலைப்பொழிவில் வரும் 'பேறுபெற்றோர்' குறித்து தன் சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அனைத்துப் புனிதர்கள் திருவிழா என்பது நமக்கு விடுமுறை நாளாக இருப்பதன் காரணம், நாம் நல்லவர்கள் என்பதால் அல்ல, மாறாக, இயேசுவின் வாழ்வு நம்மைத் தொட்டுச் சென்றுள்ளதாலேயே ஆகும். புனிதர்கள் என்பவர்கள், நமக்குரிய முழுமையான, அப்பழுக்கற்ற எடுத்துக்காட்டுகள் என்று கூறமுடியாது. ஆனால், அவர்கள், கடவுள் வழியாக கடந்து சென்றவர்கள். கோவிலின் சன்னல்களில் பொருத்தப்பட்டிருக்கும் நிறக் கண்ணாடிகளுக்கு அவர்களை ஒப்பிடலாம். அதன் வழியாக பல்வேறு நிறங்கள் உள்ளே வருகின்றன. புனிதர்களும் அதேமாதிரிதான். இறைவனின் ஒளியைப் பெறும் அவர்கள், தங்கள் நற்குணங்களுக்கு ஏற்ப, அதனை நமக்கு பிரதிபலிக்கிறார்கள்.

அவர்கள் பாவ இருளையும், கறைகளையும் களைந்து, தங்கள் வழியாக இறை ஒளி இவ்வுலகை அடைய போராடியவர்கள். இதுவே வாழ்வின் நோக்கம், இதுவே நம்மிடமும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய திருப்பலி வாசகத்தில், இயேசு, பேறுபெற்றோர் பற்றி எடுத்துரைக்கிறார். பேறுபெற்றோர் என்ற வார்த்தைகளுடனேயே அவரின் மலைப் பொழிவு துவங்குகிறது. அதுவே நற்செய்தி, அதுவே மகிழ்ச்சியின் பாதை. இயேசுவுடன் இருக்கும் அனைவரும் பேறுபெற்றோர், மகிழ்ச்சி நிரம்பியவர். ஒரு பொருளைக் கொண்டிருப்பதோ, ஒரு பெருமகனாக மாறுவதோ, மகிழ்ச்சியின் நிலை அல்ல. மாறாக, இயேசுவோடு இணைந்திருப்பதும், அன்புக்காக வாழ்வதுமே மகிழ்ச்சியாகும். நீங்கள் இதை நம்புகிறீர்களா? மகிழ்வான வாழ்விற்கு தேவையான மூலக்கூறுகளே, பேறுபெற்ற நிலைகள் என அழைக்கப்படுகின்றன. எளிய மனதோரும், தாழ்ச்சியுடையோரும், பிறருக்காகவும் தங்கள் தவறுகளுக்காகவும் அழத் தெரிந்தோரும், நீதிக்காகப் போராடுவோரும் என இவர்கள், தங்கள் இதயத்தின் தூய்மையை காப்பாற்றுபவர்களாக, அனைவர் மீதும் இரக்கமுடையவர்களாக, அமைதிக்காக உழைப்பவர்களாக, மகிழ்வில் நிலைத்திருப்பவர்களாக, பிறர் மீது பகைமை பாராட்டாதவர்களாக, தாங்கள் துன்புறும்போதுகூட, தீமைக்கு நன்மையையே பதில்மொழியாகத் தருபவர்களாக  உள்ளனர்.

பேறுபெற்ற பாக்கியங்களுக்கு அசாதரண நிலைகள் தேவையில்லை. தினசரி வாழ்வில் துன்பங்களையும் சோதனைகளையும் சந்திப்பவர்களுக்கு உரியவை அவை. புனிதர்களும் அவ்வாறே. தீமைகளால் மாசடைந்த இவ்வுலகின் காற்றை அவர்கள் சுவாசித்தாலும், அவர்கள் செல்லவேண்டிய இயேசுவின் பாதையை, அதாவது பேறுபெற்றவர்கள் பற்றி கூறப்பட்டுள்ள கிறிஸ்தவ வாழ்வின் வரைபடத்தை  அவர்கள் ஒருநாளும் மறப்பதில்லை. இந்த நாளில் புனிதர்களை மட்டுமல்ல, நம் வாழ்வில் நாம் சந்தித்த அனைவரையும், நம் அடுத்த வீட்டில் இருப்பவர் உட்பட அனைவரையும் நினைவுகூர்வோம்.  இது ஒரு குடும்ப விழா. இவ்வுலகை முன்னோக்கி எடுத்துச் செல்வதில் ஒத்துழைக்கும் அனைவருடனும் இணைந்து கொண்டாடும் விழா.

எளிய மனதோர் பேறுபெற்றோர் என முதலில் கூறப்படுவதைக் காண்கின்றோம். இத்தகையோர், வாழ்வில் வெற்றி அடையவேண்டும் என்றோ, செல்வத்திற்காகவோ வாழவில்லை. மாறாக, இவ்வுலகின் செல்வங்களை நாடி ஓடுவோர், கடவுள் முன் செல்வம் இல்லாதவராக இருப்பர் என்பது இவர்களுக்குத் தெரிந்ததே. நம் வாழ்வின் செல்வம் என்பது, இறைவனே என்பதும், அடுத்திருப்பவர் மீது அன்பு காட்டுவது, நம் வருமானத்திற்கான ஆதாரம் என்பதும், அவர்களுக்குத் தெரியும். நம்முடைய பேறுபெற்ற நிலை என்பது, இங்கில்லை, மாறாக, இறைவனோடு உள்ளது என்பதையும், அன்புகூர்வதன் வழியாகவே நாம் பேறுபெற்றவராக வாழ்கிறோம் என்பதையும் நாம் அறிவோம்.

நற்செய்தியில் குறிப்பிடப்படாத பிறிதொரு பேறு பெற்ற நிலை குறித்து இன்று உங்களுக்கு எடுத்துரைக்க விழைகிறேன். திருவெளிப்பாடு நூல் 14ம் பிரிவில் கூறப்பட்டுள்ள, 'ஆண்டவரோடு இணைந்த நிலையில் இறப்போர் பேறுபெற்றோர்'  என்பதே அது. இறந்தோருக்காக நாளைய தினத்தில் சிறப்பான விதத்தில் செபிக்கும்படி நாம் அழைக்கப்பட்டுள்ளோம். இறந்துபோன நம் அன்புக்குரியவர்களை நன்றியுடன் நினைவுகூர்ந்து அவர்களுக்காக செபிப்போம். நம்முடைய புனித நிலைக்குரிய பாதைக்காகவும், நம்மை விட்டு விண்ணுலகிற்குச் சென்றுள்ள நம் உறவினர்களுக்காகவும் அன்னை மரியின் பரிந்துரையை நாடுவோம்.

இவ்வாறு, அனைத்துப் புனிதர்கள் விழாவன்று, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 2ம் தேதி, இவ்வியாழனன்று, உரோம் நகருக்கு 60 கிலோமீட்டர் தொலைவிலுள்ள நெத்தூனோ என்ற நகரில் அமைந்துள்ள அமெரிக்க வீரர்களின் கல்லறைக்கு தான் செல்லவிருப்பதையும், அங்கிருந்து உரோம் நகர் திரும்பும்போது, அர்தியத்தீனா என்ற இடத்தில் உள்ள கல்லறைக்கும் சென்று வர உள்ளதையும் எடுத்துரைத்தார். வளாகத்தில் குழுமியிருந்த பல்வேறு குழுக்களுக்கும் தன் வாழ்த்துக்களை வெளியிட்டு, தனக்காக செபிக்குமாறும் வேண்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.