2017-11-01 16:24:00

7 நிமிடங்களுக்கு ஒரு வளர் இளம் பருவத்தினர் கொலை


நவ.01,2017. 12 மாதக் குழந்தைகள் உட்பட, வன்கொடுமைகளுக்கு உள்ளாகும் குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினரின் எண்ணிக்கை, அதிர்ச்சி தரும் அளவில் உயர்ந்துள்ளது என்று ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான யூனிசெஃப், நவம்பர் 1, இப்புதனன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமைகள், உடல் ரீதியான சித்ரவதைகள், கொலைகள் என்று, குழந்தைகளுக்கு எதிராக வளர்ந்துவரும் கொடுமைகள் அதிர்ச்சியளிக்கின்றன என்று யூனிசெஃப் தலைவர் கொர்னேலியுஸ் வில்லியம்ஸ் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

இக்கொடுமைகள் அனைத்தும், குழந்தைகளைக் காக்கும் பொறுப்புள்ள உறவுகளின் வழியே உருவாகின்றன என்பது மேலும் அதிர்ச்சி தரும் தகவல் என்று யூனிசெஃப் அறிக்கை கூறுகிறது.

2 முதல் 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில், 30 கோடிக்கும் அதிகமானோர், தங்களைக் காக்க வேண்டியவர்களிடமிருந்து, உடல் ரீதியாகவும், மனதளவிலும் கொடுமைகளை அனுபவிக்கின்றனர் என்று இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

ஒவ்வொரு 7 நிமிடங்களுக்கு ஒரு வளர் இளம் பருவத்தினர் கொலையுறுகின்றார் என்றும், பள்ளிகளில் நடைபெறும் கொடுமைகளால் வளர் இளம் பருவத்தினர் அடையும் பாதிப்புக்கள் அதிகம் என்றும் இவ்வறிக்கை எடுத்துரைக்கின்றது.

ஆதாரம் : UNICEF / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.