2017-10-31 15:25:00

சிரியா மருத்துவர்கள் திருத்தந்தையிடம் பகிர்வு


அக்.31,2017. “அன்பிலும், நீதியிலும், உண்மையிலும் அமைதியை கட்டியெழுப்புவதற்கு, ஒவ்வொரு நாளும் முதல் அடியை நாம் எடுத்து வைப்பதற்கு அன்னை மரியா உதவுவாராக” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில் இச்செவ்வாயன்று வெளியாயின.

மேலும், 2011ம் ஆண்டிலிருந்து சண்டை இடம்பெற்றுவரும் சிரியா நாட்டுச் சிறார்க்காக ஒவ்வொரு நாளும் செபிப்பதாகவும், அந்நாட்டை அன்புகூர்வதாகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிரியாவில் மிகவும் ஆபத்தான பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்களிடம் கூறினார்.

கடந்த வார புதன் மறைக்கல்வியுரைக்குப் பின் திருத்தந்தையைச் சந்தித்த, Ayman Nour ஆகிய இரு மருத்துவர்கள் வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில், சிரியாவின் நிலைமை பற்றி திருத்தந்தையிடம் விளக்கியதாகக் கூறினர்.

சண்டையிடும் தரப்புக்களால் மருத்துவமனைகள் குறிவைத்து தாக்கப்படுகின்றன என்றும், மருத்துவர் Ayman அவர்கள் கூறினார்.

சிரியாவில் இன்னும் ஆயுத மோதல்கள் இடம்பெற்றுவரும் Idlib பகுதியில் பணியாற்றிவரும் இவ்விரு மருத்துவர்களும், சிரிய-அமெரிக்க மருத்துவ கழகத்தைச் (SAMS) சேர்ந்தவர்கள். மருத்துவமனைகள், பள்ளிகள், நலவாழ்வு மையங்கள் ஆகியவற்றை நடத்துவதற்கு, இக்கழகம், அரசு-சாரா நிறுவனங்களை முற்றிலும் சார்ந்துள்ளது.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.