அக்.27,2017. “இரக்கத்தில் மிகவும் செல்வமுடைய ஓர் அன்பால், கடவுள் நம்மீது அன்புகூர்கிறார், இத்தகைய கடவுள் நம்மை இடைவிடாமல் வரவேற்கிறார், பாதுகாக்கிறார் மற்றும் மன்னிக்கிறார்” என்ற வார்த்தைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டரில் இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ளார்.
இன்னும், இவ்வெள்ளி காலையில், திருப்பீடத்தில் Canterbury ஆங்லிக்கன் பேராயர் Justin Welby அவர்கள், திருத்தந்தையைச் சந்தித்து உரையாடினார்.
மேலும், இரக்கத்தின் யூபிலி ஆண்டில், 2016ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இன்ஸ்டகிராம் (Instagram) செயலியைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை, ஐம்பது இலட்சத்தைத் தாண்டியுள்ளது என்று, SPC எனப்படும், திருப்பீட சமூகத்தொடர்பு செயலகம் அறிவித்துள்ளது.
@Franciscus என்ற இன்ஸ்டகிராம் முகவரியைப் பின்பற்றுவோரில் 65 விழுக்காட்டினர் பெண்கள் என்றும், 35 விழுக்காட்டினர் ஆண்கள் என்றும், படங்களுடன் வெளியிடப்படும் இந்த சமூகவலைத்தளத்தைப் பின்பற்றும் பெண்களில் பெரும்பாலானவர்கள் 18க்கும் 24 வயதுக்கும் உட்பட்டவர்கள் என்றும், ஆண்களில் பெரும்பாலானவர்கள், 25க்கும் 34 வயதுக்கும் உட்பட்டவர்கள் என்றும், SPC செயலகம் மேலும் அறிவித்துள்ளது.
மேலும், உரோம் நகர் Scholas Occurentes மையத்திற்கு இவ்வியாழன் மாலையில் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். அங்கு, இளையோர் மற்றும் சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களுக்காகப் பணியாற்றும் மாணவர்கள், சான்றோர்கள், செய்தியாளர்கள், வர்த்தகர்கள் போன்ற பலரைச் சந்தித்தார் திருத்தந்தை. மேலும், பரகுவாய், மெக்சிகோ, அர்ஜென்டீனா ஆகிய நாடுகளில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள Scholas Occurentes மையங்களையும் ஆரம்பித்து வைத்தார் திருத்தந்தை. உரோமிலுள்ள இந்த மையத்தை கடந்த ஜூன் 9ம் தேதி திறந்து வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |