2017-10-27 15:29:00

ஐரோப்பா பற்றி மீண்டும் சிந்தித்து பார்த்தல் வத்திக்கானில்..


அக்.27,2017. ஐரோப்பா பற்றி மீண்டும் சிந்தித்து பார்த்தல் என்ற தலைப்பில், இவ்வெள்ளி மாலையில் வத்திக்கானில் ஆரம்பித்த ஐரோப்பிய உயர்மட்ட அளவிலான உரையாடல் கூட்டம் பற்றி, செய்தியாளர்களிடம் விளக்கினார், ஜெர்மன் கர்தினால் Reinhard Marx.

காலநிலை மாற்றம், தொழில் உலகில், குறிப்பாக தொழில்நுட்ப உலகில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள், மக்களின் புலம்பெயர்வு மற்றும் குடியேற்றம் போன்ற விவகாரங்களால் ஐரோப்பா சவால்களை எதிர்கொள்ளும்வேளை, இவற்றுக்கு திருஅவை எவ்வாறு உதவ முடியும் என்று, கலந்துரையாடல்கள் நடைபெறும் என்று விளக்கினார், கர்தினால் Marx.

திருப்பீட செயலகத்தின் உதவியுடன், COMECE என்ற ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பு வத்திக்கானில் நடத்தும் இக்கூட்டத்தில், EU ஐரோப்பிய ஒன்றிய அவை நாடுகளின் உயர்மட்ட அரசியல் தலைவர்கள், கத்தோலிக்க மற்றும் பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகள், தூதரக அதிகாரிகள், கல்வியாளர்கள் போன்ற 350 முக்கியமான நபர்கள் கலந்துகொள்கின்றனர்.

சிறு சிறு குழுக்களாக கலந்துரையாடல்களை நடத்தும் இப்பிரதிநிதிகள் பொதுவான கலந்துரையாடல்களை நடத்துவதற்குமுன், இச்சனிக்கிழமையன்று திருத்தந்தையின் உரையும் இடம்பெறும் கர்தினால் Marx அவர்கள் அறிவித்தார்.

COMECE கூட்டமைப்பின் தலைவரான கர்தினால் Marx, பன்னாட்டு உறவுகளின் திருப்பீட செயலர் பேராயர் பால் காலகர் ஆகிய இருவரும், இந்த செய்தியாளர்கள் சந்திப்பை, நடத்தினர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.