2017-10-26 16:01:00

போர்த்துக்கல் கத்தோலிக்க பல்கலைக்கழகப் பிரதிநிதிகளுக்கு..


அக்.26,2017. போர்த்துக்கல் நாட்டு கத்தோலிக்க பல்கலைக்கழக வேந்தர், துணை வேந்தர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர் பிரதிநிதிகள் 150 பேரை, இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பல்கலைக்கழகம் கடந்த ஐம்பது ஆண்டுகளில், மனித மற்றும் சமூகத்தின் வளர்ச்சிக்கு ஆற்றியுள்ள சேவைகளைப் பாராட்டி ஊக்கப்படுத்தினார்.

பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் கல்வி, சமூகத்தில் உயர்நிலையை அடைவதற்கும், அதிகப் பணம் சேமிப்பதற்கும், பட்டயங்களை வாங்குவதற்கும் உதவுகின்றதா அல்லது இக்காலப் பிரச்சனைகளை கண்ணோக்கி, ஏழைகளின் தேவைகளை நிறைவேற்றவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் உதவுகின்றதா என்று, தங்களையே கேள்வி கேட்குமாறு, அப்பிரதிநிதிகளிடம் கூறினார் திருத்தந்தை.

ஒரு கத்தோலிக்க நிறுவனம், தன் மாணவர்கள் நடத்தும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகளின் சாதனைகளில் முழு மனிதரை மையப்படுத்துகின்ற, நன்னெறி, ஆன்மீக மற்றும் சமயக் கூறுகள் இணைக்கப்பட உதவ வேண்டும் என்பதை வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மனிதர் மற்றும் அவரின் நன்னெறிப் பாதை பற்றிய முழு உண்மையை வெளிப்படுத்துவது நற்செய்தி என்றும், போர்த்துக்கல் நாட்டில் விசுவாசக் கோட்பாடுகள் எப்போதும் காக்கப்பட்டு வருகின்றன என்றும் உரையாற்றிய திருத்தந்தை, இப்பல்கலைக்கழகம் இதனைத் தொடர்ந்து காத்துவரும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார். இறுதியில் தனக்காகச் செபிக்குமாறும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.