2017-10-25 16:08:00

எல்லா இடங்களிலும் துணிச்சல்மிக்க சான்றுகளாய் விளங்குங்கள்


அக்.25,2017. “நீங்கள் வாழ்கின்ற மற்றும் பணிசெய்யும் இடங்களில், கிறிஸ்துவுக்கு துணிச்சல்மிக்க சான்றுகளாய் விளங்குங்கள்” என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டரில் இப்புதன்கிழமையன்று அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், திருப்பீட இலத்தீன் அமெரிக்க அவையின் உதவித் தலைவர் பேராசிரியர் Guzmán Carriquiry அவர்கள் எழுதிய "நினைவு, துணிச்சல், மற்றும் நம்பிக்கை (Memoria, Coraje y Esperanza)" என்ற நூலின் புதிய பதிப்புக்கு முன்னுரை எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இலத்தீன் அமெரிக்காவில் நடந்து கொண்டிருப்பது என்ன? அக்கண்டத்தின் நம்பிக்கை எதில் உள்ளது? குழப்பங்களுக்கு மத்தியில் நாம் ஒதுங்கிக்கொள்கிறோமா? பொருளாதார மற்றும் மனிதச் சீரழிவுகளைக் காட்டுகின்ற கருத்தியல்களில் நம்பிக்கை வைப்பதற்கு நாம் மீண்டும் திரும்பியுள்ளோமா? போன்ற கேள்விகளை இந்நூலின் முன்னுரையில் எழுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இலத்தீன் அமெரிக்கா விடுதலைபெற்றதன் இருநூறாம் ஆண்டையொட்டி இந்நூல் வெளியிடப்பட்டதைக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, அக்கண்டத்திற்கு அவசியமானது எது என்பதை சிந்திப்பதற்கு இது நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது என்று எழுதியுள்ளார். 

2011ம் ஆண்டில் இந்நூல் முதலில் வெளியிடப்பட்டபோது, புவனோஸ் அய்ரெஸ் பேராயராகப் பணியாற்றிய கர்தினால் Jorge Mario Bergoglio, அதாவது தற்போதைய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முன்னுரை எழுதினார், தற்போது அந்நூலின் புதிய பதிப்புக்கு அவர் எழுதியிருக்கிறார்.

127 பக்கங்கள் கொண்ட இப்புதிய பதிப்பு, வருகிற நவம்பர் 16ம் தேதி, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களால் வெளியிடப்படும்.   

இலத்தீன் அமெரிக்கா விடுதலைபெற்றதன் இருநூறாம் ஆண்டையொட்டி இந்நூல் முதலில் வெளியிடப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.