2017-10-24 16:14:00

“தண்ணீரும் காலநிலையும்" உலக மாநாட்டில் கர்தினால் பரோலின்


அக்.24,2017. மனித வாழ்வின் ஆக்கத்திற்கும், அழிவுக்கும் தண்ணீர் எவ்வளவு தூரம் காரணமாக அமைந்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிப் பேசிய அதேநேரம், நீர் வளங்களைப் பாதுகாப்பதற்கு, மனித சமுதாயத்தின் பல நிலைகளிலும் புதிய அணுகுமுறைகள் அவசியம் என்று, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், உலக மாநாடு ஒன்றில் உரையாற்றினார்.

“தண்ணீரும் காலநிலையும் : உலகின் பெரிய நதிகள் சந்திப்பு" என்ற தலைப்பில், உரோம் நகரில் நடைபெற்றுவரும் உலக மாநாட்டிற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய செய்தியை வாசித்தபின், தன் கருத்துகளை எடுத்துரைத்த கர்தினால் பரோலின் அவர்கள், தண்ணீரின் நன்மைகள் பற்றியும், அது எவ்வாறு வாழ்வை அழிக்கின்றது என்பது பற்றியும் விரிவாகப் பேசினார்.

வெள்ளப்பெருக்கு, தண்ணீர் பஞ்சம் போன்றவற்றுக்கு காரணமான பல்வேறு இயற்கைப் பேரிடர்களால் இப்பூமியில் மனிதரை அழிப்பதற்கும், இரண்டு அல்லது மூன்று நாடுகளுக்கிடையே இருக்கும் நீர் வளத்தால் ஒருமைப்பாட்டுக்குப் பதிலாக, மோதல்களுக்கும், தண்ணீர் காரணமாக அமைந்துள்ளது என்று கர்தினால் குறிப்பிட்டார்.

அக்டோபர் 23, இத்திங்களன்று தொடங்கியுள்ள இந்த உலக மாநாடு, அக்டோபர் 25 இப்புதனன்று நிறைவடைகின்றது. ஐ.நா.வின் ஐரோப்பாவுக்கான பொருளாதார அவையின் (UNECE) ஒத்துழைப்புடன், இத்தாலிய, சுற்றுச்சூழல், நிலம் மற்றும் கடல் அமைச்சகம் இம்மாநாட்டை நடத்துகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.