2017-10-23 15:49:00

பணத்தோடு அல்ல,கடவுளோடு உள்ள உறவில் செல்வத்தைத் தேடுங்கள்


அக்.23,2017. உலகில் இடம்பெறும் எண்ணற்ற பேரிடர்கள், அநீதிகள் போன்றவற்றால் எண்ணற்ற சிறார் துன்புறுவதையும், பசியால் இறப்பதையும் மறந்தவர்களாய், கடவுளோடு உள்ள உறவில் செல்வத்தைத் தேடாமல், பணம் சம்பாதிப்பதை தங்கள் கடவுள்களாக அமைக்கும் மனிதரின் இதயங்கள் திருந்துவதற்கு உருக்கமாகச் செபிப்போம் என்று, இத்திங்கள் காலை மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இத்திங்கள் காலை நிறைவேற்றிய திருப்பலியின் நற்செய்தி வாசகமான (லூக்.12:13-21), தனது செல்வத்தையே தனது கடவுளாக நினைத்த அறிவற்ற செல்வன் உவமை பற்றி மறையுரையில் எடுத்துரைத்த திருத்தந்தை, இவ்வுலகப் பொருள்களைச் சார்ந்திருப்பது எவ்வளவு வீண் என்பதை இவ்வுவமை சிந்திக்க வைக்கின்றது என்று கூறினார்.

பணத்தை வழிபடும் இந்தச் சிலைவழிபாடு, எண்ணற்ற மக்கள் மக்கள் துன்புறுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது என்றும், எடுத்துக்காட்டாக, புலம்பெயர்ந்தவர் முகாம்களில் வாழும் இரண்டு இலட்சம் ரோஹிங்கியா சிறார் பற்றி நாம் சிந்திக்கலாம் என்றும், அம்முகாம்களில் வாழ்கின்ற எட்டு இலட்சம் ரோஹிங்கியா மக்களில், இரண்டு இலட்சம் பேர் சிறார் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

இந்த ரோஹிங்கியா மக்கள், உண்பதற்கு எதுவுமின்றி, ஊட்டச்சத்து உணவின்றி, மருந்துகளின்றி துன்புறுகின்றனர், நம் ஆண்டவர் அக்காலத்தில் கூறியது இன்றும் நடக்கின்றது, இதனாலேயே, பணத்தைக் கடவுளாக வழிபடும் மக்களின் மனங்களை, ஆண்டவரே தயவுகூர்ந்து தொடும் என்று, நாம் இன்று மிகவும் உருக்கமாக மன்றாட வேண்டியுள்ளது என்று திருத்தந்தை மறையுரையில் கூறினார்.

சில ஆண்டுகளுக்குமுன், அர்ஜென்டீனாவின் புவனோஸ் அய்ரெசில் செல்வந்த தொழில் அதிபர் ஒருவர், தான் கடும் நோயால் தாக்கப்பட்டிருந்ததையும் அறிந்தவராய், தான் விரைவில் கடவுள் முன் நிற்கவேண்டும் என்பதையும் சிந்திக்காமல், சொகுசு பங்களா ஒன்றை வாங்கினார், இன்றும்கூட, பணப் பசியையும், இவ்வுலக செல்வங்கள் மீதுள்ள பசியையும் கொண்டிருக்கும் மனிதர்கள் உள்ளனர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மறையுரையாற்றினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.