2017-10-23 15:50:00

திருவழிபாட்டு நூல் மொழிபெயர்ப்பு விதிகள் குறித்த விளக்கம்


அக்.23,2017. இலத்தீன் மொழியிலுள்ள திருவழிபாட்டு நூல்களை வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கும்போது, அதனை திருப்பீடம் ஆராய்ந்து ஒப்புதல் வழங்கிய பின்னரே பயன்படுத்தவேண்டும் என்ற பழைய விதிமுறையை மாற்றி, தற்போது ஆயர் பேரவைகளுக்கு அதிக அதிகாரத்தை வழங்கும் முறை குறித்து மேலும் சில விளக்கங்களை அண்மையில் வழங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பீடத்துடன் ஆன ஒத்துழைப்புடன், அந்தந்த ஆயர் பேரவைகள் இந்த மொழிபெயர்ப்புகளை மேற்கொண்டு, அவர்களே அந்த மொழிபெயர்ப்புகளை அங்கீகரிக்கலாம் என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Magnum Principium என்ற ஏட்டை வெளியிட்டது தொடர்பாக, பல்வேறு திருஅவைகளில் எழுந்துள்ள கேள்விகளைத் தொகுத்து, திருப்பீடத்தின் திருவழிபாட்டு பேராய தலைவர் கர்தினால் இராபர்ட் சாரா அவர்கள் அனுப்பியுள்ள கடிதத்திற்கு விளக்கமாக பதில் வழங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருவழிபாட்டு நூல்களைப் பொறுத்தவரையில் ஆயர் பேரவைகளுக்கு அதிக அதிகாரத்தை வழங்கும் அதேவேளை, மொழிபெயர்ப்புகளில், வார்த்தைக்கு வார்த்தை திருப்பீடம் ஆய்வுச் செய்யப் போவதில்லை எனவும், தெளிவில்லாத வேளைகளில் மட்டும், குறிப்பாக, திருப்பலி மற்றும் அருளடையாளங்களை நிறைவேற்றும் வழிபாட்டு வார்த்தைகளைப் பொறுத்தவகைகளில், ஆயர் பேரவைகளின் மறுபரிசீலனைக்கு விண்ணப்பிக்கப்படும் எனவும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இலத்தீன் மொழியிலுள்ள மூல நூலுக்கு விசுவாசமாக இருத்தல், தெளிவான மொழிபெயர்ப்பு, வழிபாட்டு வார்த்தைகளை விசுவாசிகள் கிரகித்து புரிந்துகொள்ள உதவுதல் ஆகிய மூன்று விடயங்களிலேயே, புதிய விதி முறைகள் செயல்படுத்தப்படுகின்றன எனவும் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவைச் சட்டங்களுடனும், திருஅவை ஒன்றிப்புடனும் ஒத்திணங்கிச் செல்வதாக திருவழிபாட்டு நூல் மொழிபெயர்ப்பு இருக்கவேண்டும் என்பதே எதிர்பார்க்கப்படுகின்றது என, மேலும் தன் பதிலில் உரைத்துள்ளார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.