2017-10-21 16:30:00

திருத்தந்தை, முதுபெரும் தந்தை 3ம் தெயோபிலோஸ் சந்திப்பு


அக்.21,2017. எருசலேமின் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை மூன்றாம் தெயோபிலோஸ் (Theophilos III) அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, வருகிற திங்களன்று வத்திக்கானில் சந்திப்பார் என்று, திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்பு அவை அறிவித்துள்ளது.

அக்டோபர் 22, இஞ்ஞாயிறன்று, உரோமையில், கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சபையின் முக்கிய தலைவர்களுடன் நான்கு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதுபெரும் தந்தை மூன்றாம் தெயோபிலோஸ் அவர்கள், திருத்தந்தையையும் சந்திக்கவுள்ளார்.

திருத்தந்தையை சந்தித்த பின், திருப்பீட செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், பன்னாட்டு உறவுகளின் திருப்பீட செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் ஆகிய இருவரையும், அத்தலைவர்கள் சந்திப்பார்கள்.

மேலும், திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்பு அவைத் தலைவர் கர்தினால் Kurt Koch, திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran ஆகியோரையும், அத்தலைவர்கள் சந்திப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதுபெரும் தந்தை மூன்றாம் தெயோபிலோஸ் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, 2014ம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற எருசலேம் திருத்தூதுப் பயணத்தின்போது சந்தித்துள்ளார். மேலும், அதே ஆண்டு ஜூன் மாதத்தில், வத்திக்கான் தோட்டத்தில் அமைதிக்காக இடம்பெற்ற பல்சமய செப வழிபாட்டிலும் முதுபெரும் தந்தை மூன்றாம் தெயோபிலோஸ் அவர்கள் கலந்துகொண்டுள்ளார்.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.