2017-10-21 15:56:00

தாயன்புமிக்க மறைப்பணியாளர் திருஅவைக்கு தேவை


அக்.21,2017. “திருஅவை, தாய் போலவும், மறைப்பணியாளராகவும் இருந்து பிறரைச் சந்திக்கச் சென்றால், அது உண்மையிலேயே உயிர்த்துடிப்புடன் இருக்கின்றது” என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று கூறினார்.

அக்டோபர் 22, இஞ்ஞாயிறன்று 91வது உலக மறைபரப்பு தினம் சிறப்பிக்கப்படுவதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட டுவிட்டரில், மக்களுக்கு மறைப்பணியாற்றுகையில், தாயன்புடன் செயல்படுமாறு திருஅவைக்கு அழைப்பு விடுத்தார்.

மேலும், உலகில் கத்தோலிக்கரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என்றும், அவ்வெண்ணிக்கை உலக மக்கள் தொகையில் 17.7 விழுக்காடு, அதாவது ஏறத்தாழ 130 கோடி என்றும், திருஅவையின் புள்ளி விவர நூல் கூறுகின்றது.

2015ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி நிலவரப்படி, 2014ம் ஆண்டில் திருமுழுக்குப் பெற்ற கத்தோலிக்கரின் எண்ணிக்கையைவிட, 2015ம் ஆண்டில் இவ்வெண்ணிக்கை ஒரு கோடியே 25 இலட்சம் அதிகரித்திருந்தது என்றும், அந்நூலில் சொல்லப்பட்டுள்ளது.

ஆப்ரிக்க மக்கள் தொகையில் 19.42 விழுக்காடு, அதாவது ஏறத்தாழ 22 கோடியே 20 இலட்சம்; அமெரிக்க மக்கள் தொகையில் 63.6 விழுக்காடு, அதாவது ஏறத்தாழ 63 கோடியே 50 இலட்சம்; ஐரோப்பிய மக்கள் தொகையில் 39.87 விழுக்காடு, அதாவது ஏறத்தாழ 28 கோடியே 50 இலட்சம்; ஆசிய மக்கள் தொகையில் 3.24 விழுக்காடு அதாவது ஏறத்தாழ 14 கோடியே 10 இலட்சம்... என்று உலகில் கத்தோலிக்கர் உள்ளனர்.

மேலும், உலகில் கத்தோலிக்கத் திருஅவை, 2 இலட்சத்து 16 ஆயிரத்து, 548 பள்ளிகளை நடத்துகின்றது என்றும், இவற்றில் ஆறு கோடிக்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது. இன்னும், மருத்துவமனைகள், தொழுநோயாளர் மையங்கள், கருணை இல்லங்கள், முதியோர் இல்லங்கள் போன்ற, ஏறத்தாழ ஒரு இலட்சத்து 18 ஆயிரம் கத்தோலிக்க நலவாழ்வு மையங்கள் உள்ளன என்றும் அந்நூலில் சொல்லப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.