2017-10-20 10:05:00

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தை இறப்பு குறைவு, யுனிசெப்


அக்.19,2017. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் காப்பாற்றுவதில், கடந்த 25 ஆண்டுகளில், உலகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது என்று, ஐ.நா. நிறுவனங்கள் வெளியிட்ட புதிய அறிக்கை கூறுகிறது.

ஐந்து வயதுக்கும், 14 வயதுக்கும் உட்பட்ட சிறார் இறப்பு 2017 என்ற தலைப்பில், யுனிசெப், உலக நலவாழ்வு நிறுவனம், உலக மக்கள் தொகை கட்டுப்பாட்டு அமைப்பு, உலக வங்கி ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 1990ம் ஆண்டுக்கும், 2016ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், குழந்தை இறப்பு விகிதம் 62 விழுக்காடாகக் குறைந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இக்காலக் கட்டத்தில்,  குழந்தைகளின் இறப்பு, ஒரு கோடியே 27 இலட்சத்திலிருந்து, 56 இலட்சமாகக் குறைந்துள்ளது எனினும், இந்த முன்னேற்றம், உலக அளவில் இடம்பெறவில்லையென்றும் அவ்வறிக்கை தெரிவிக்கின்றது.

1990ம் ஆண்டில், ஒவ்வொரு நாளும் ஐந்து வயதுக்குட்பட்ட 35,000 குழந்தைகள் இறந்தனர், ஆனால், இவ்வெண்ணிக்கை, 2016ம் ஆண்டில், 15 ஆயிரமாகக் குறைந்துள்ளது என்றும், அவ்வறிக்கை கூறுகின்றது.

புதிதாக பிறக்கும் குழந்தைகளின் இறப்பு விகிதம் குறையவில்லை என்றும் கூறுகிறது அவ்வறிக்கை.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.