2017-10-19 16:58:00

உலக மெத்தடிஸ்ட் அவை பிரதிநிதிகளிடம் திருத்தந்தை


அக்.19,2017. ஒப்புரவு மற்றும் முழு ஒன்றிப்புக்காக, நாம் ஒன்றுசேரந்து செபிக்காமலும், அதற்காக உழைக்காமலும் இருந்துகொண்டு, செபம் மற்றும் பிறரன்பு பற்றி நம்மால் பேச இயலாது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக மெத்தடிஸ்ட் அவை பிரதிநிதிகளிடம் கூறினார்.

மெத்தடிஸ்ட் கிறிஸ்தவ சபைக்கும், கத்தோலிக்கருக்கும் இடையே இறையியல் உரையாடல் அவை தொடங்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் நிறைவுறுவதை முன்னிட்டு,   உலக மெத்தடிஸ்ட் அவையின் 52 பிரிதிநிதிகளை, இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த ஐம்பது ஆண்டுகளில் இவ்விரு சபைகளுக்கிடையே உறவுகள் வளர்ந்திருப்பது குறித்துப் பேசினார்.

விவிலியத்தின் லேவியர் நூலில் ஐம்பதாவது ஆண்டு பற்றிச் சொல்லப்பட்டிருப்பதையும், இண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் கிறிஸ்தவ ஒன்றிப்பு உரையாடலை ஊக்குவித்திருப்பது பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, நேர்மையிலும், ஒருங்கிணைந்த தன்மையிலும் ஒருவர் ஒருவரைப் புரிந்துகொள்வதற்கு எடுக்கப்படும் முயற்சியில், தாழ்ச்சி மற்றும் உண்மையில், ஒருவர் ஒருவரைச் சந்திப்பதற்கு, உண்மையான உரையாடல் ஊக்கமளிக்கின்றது என்றும் கூறினார்.

குழு ஒன்றிப்பில் வளராமல், புனிதத்தில் நம்மால் வளர முடியாது என்றும், ஒப்புரவு பற்றிய உரையாடல், நம் சமூகங்களுக்கு மட்டுமல்லாமல், உலகுக்கே ஒரு கொடையாக விளங்கட்டும் என்றும், உலகெங்கும் வாழ்கின்ற கிறிஸ்தவர்கள், ஒப்புரவின் திருப்பணியாளர்களாக செயல்படுவதற்கு உதவட்டும் என்றும் திருத்தந்தை வாழ்த்தினார்.

உலக மெத்தடிஸ்ட் அவை, கத்தோலிக்கருடன் உரையாடலுக்குத் தொடர்ந்து கொடுத்துவரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த திருத்தந்தை, நாம் ஒருவர் ஒருவரை, கிறிஸ்துவில் சகோதர, சகோதரிகளாகப் பார்ப்பதற்குக் கற்றுக்கொண்டிருக்கிறோம், இரு சபைகளுக்கும் இடையே முழு ஒன்றிப்பு ஏற்படுவதற்கு, தாழ்மையான நம்பிக்கையோடும், தெளிவான முயற்சிகளோடும் நம்மைத் தயாரிப்பதற்கு காலம் கனிந்துள்ளது என்றும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.