2017-10-18 14:51:00

பாசமுள்ளப் பார்வையில்…....., : தாய்வழி பாசம் எனும் தொடர்கதை


அந்தத் தாய் அடிக்கடி தொலைபேசியின் பக்கமே வந்து போய்க்கொண்டிருந்தார். அடுப்பில் ஏதாவது ஒரு வேலையைச் செய்துவிட்டு இடையிடையே, முன்அறைக்கு வந்து தொலைபேசி பக்கம் நிற்பதும், பின், சிறிது நேரத்தில் அடுப்படி வேலையைக் கவனிக்க சமையலறைக்குள் நுழைவதுமாக, கடந்த இரண்டு மணிநேரங்களாக, இப்படியே சென்றுகொண்டிருந்தது. நேரம் கடந்து செல்லச் செல்ல, அந்த தாயின் முகத்தில் கவலை ரேகைகள் படிய ஆரம்பித்தன. அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழும் தன் ஒரே மகளுக்கு இன்று தலைப்பிரசவம் என்றால், எந்த தாயால்தான் நிம்மதியாக இருக்க முடியும்!. 'அம்மா, இங்கு பயப்பட ஒன்றுமில்லை, எல்லா வசதிகளும் உள்ளன. நம் ஊரைப்போல் தலைப்பிரசவம் என்றால், பயப்படத் தேவையில்லை' என, மகளே தொலைபேசியில் பலமுறை கூறிவிட்டபோதிலும், அந்தத் தாயால் பொறுமை காக்க முடியவில்லை. ஒரு பத்து நிமிடத்தில், அந்தத் தாயே தொலைபேசியில் தன் மருமகனை அழைத்தார். ஆனால், கைபேசியை எடுத்ததோ, அவரின் மகள்தான். ‘அம்மா,  குழந்தை பிறந்து ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. அவர் குழந்தையின் அருகிலேயே இருந்ததால் உங்களுக்கு செய்தி தெரிவிக்க மறந்துவிட்டார் போல. அவர் தெரிவித்திருப்பார் என்று நினைத்து நானும், பிறகு பேசலாம் என இருந்துவிட்டேன்' என மன்னிப்பு கேட்பதுபோல் கூறினார் மகள். தாய், நினைத்துக்கொண்டார், ‘நம்முடைய படபடப்பு, இனிமேல் அந்தச் சிறு குழந்தையின் அசைவுகளில் தன் மகளுக்கும் பற்றிக்கொள்ளும்’ என்று.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.