2017-10-18 14:45:00

சாம்பலில் பூத்த சரித்திரம்:அர்மேனியாவும் கிறிஸ்தவமும் - 2


அக்.18,2017. ஐரோப்பாவில் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றான அர்மேனியா, கிழக்கு ஐரோப்பாவுக்கும், தென்மேற்கு ஆசியாவுக்கும் இடையில், தெற்கு கவ்காசுஸ் மலைப்பகுதியில் அமைந்துள்ள குடியரசு நாடாகும். உலகின் முதல் கிறிஸ்தவ நாடு என்ற பெருமையும் அர்மேனியாவுக்கு உள்ளது. இன்றும் அந்நாட்டில் 95 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள். ஆயினும், இந்நாட்டின் கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவர்கள் என்பதற்காகவே, ஒட்டமான் முஸ்லிம் பேரரசால் கொடுமையான அடக்குமுறைக்கு உள்ளாகினர். 1915ம் ஆண்டில், ஏறக்குறைய 15 இலட்சம் கிறிஸ்தவர்கள், துருக்கியப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர். அர்மேனியா, கிறிஸ்தவ நாடாக மாறுவதற்குக் காரணமாக இருந்தவர், ஒளிரச் செய்பவரான புனித கிரகரி(257-337) ஆவார். இவர், அர்மேனியாவின் மாபெரும் திருத்தூதர் என்று அழைக்கப்படுகிறார். ஆயினும், இயேசுவின் திருத்தூதர்களான பர்த்தலமேயு, ததேயுஸ் ஆகிய இருவருமே இந்நாட்டில் முதலில் நற்செய்தியை பரப்பியவர்கள். இதற்கு பாரம்பரியமாகச் சொல்லப்படும் ஒரு கதையும் உள்ளது. 

புவியியல் அமைப்புப்படி பார்த்தால், அர்மேனியா, புனித பூமிக்கு வெகு தூரத்தில் இல்லை. தற்போது துருக்கி நாட்டிலுள்ள Sanliurfa (அல்லது Urfa) என்ற நகரமாகிய, எடிசாவின் அரசர் அப்கார் (Abgar of Edessa) என்பவர், இயேசுவுக்கு ஒரு கடிதம் அனுப்பி, இயேசு தன் நாட்டிற்கு வந்து புதுமைகள் செய்யுமாறு அழைப்பு விடுத்தார். தம்மைப் பின்செல்பவர்களில் யாரையாவது அங்கு அனுப்புவதாக இயேசு உறுதியளித்தார். Urfa, ஆபிரகாமின் நகரம் என அழைக்கப்படுகின்றது. இயேசு இறந்து உயிர்த்தபின், திருத்தூதர்கள் பர்த்தலமேயு, ததேயுஸ் ஆகிய இருவரும், புனித பூமியின் வடக்கே சென்று, அனத்தோலியா, ஆசியா மைனர் ஆகிய பகுதிகளில் நற்செய்தியை அறிவித்து, பின் Caucasus மலைகள் உள்ள பகுதிகளுக்குச் சென்று நற்செய்தியை அறிவித்தனர். இந்த மலைப்பகுதியில் அமைந்துள்ள அர்மேனியா சென்று நற்செய்தியை அறிவித்து அங்கே இறந்தனர் என்று சொல்லப்படுகின்றது. எனினும், அர்மேனியாவில் கிறிஸ்தவம் உடனடியாகப் பரவவில்லை. இந்நாடு, பல அடக்குமுறைகளை, குறிப்பாக, உரோமைப் பேரரசுக்குள்ளும், அர்மேனியா பேரரசுக்குள்ளும் அடக்குமுறைகளை எதிர்கொண்டது.

அர்மேனியா அரசர் மூன்றாம் Tiridates (Trdat or Drtad in Armenian), உரோமையில் கல்வி கற்றவர். இருந்தபோதிலும், கிறிஸ்துவைப் பின்செல்கிறவர்கள், தனது அரசில் கிறிஸ்தவத்தைச் சுதந்திரமாகப் பின்பற்றக் கூடாது என்பதில் அவர் கவனம் செலுத்தினார். கிறிஸ்தவர்களுக்குக் கடும் தண்டனைகளை கொடுத்தார், அவர்களைச் சித்ரவதைப்படுத்தினார். அருள்சகோதரிகள் Hripsime, Gayane ஆகிய இருவரையும், இன்னும், உரோமைப் பேரரசர் தியோக்கிளேசியனின் அடக்குமுறைகளுக்குப் பயந்து உரோமைவிட்டு வெளியேறிய கிறிஸ்தவக் குழுவினரையும், அரசர் Tiridates படுகொலை செய்தார். இந்தப் படுகொலைகளிலிருந்து தப்பித்த ஒருவர்தான் கிரகரி. இவர், கி.பி. 257ம் ஆண்டுவாக்கில் பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்தவர். பார்த்திய இனத்தவரான இவரின் தந்தை Anak என்பவர், கிரகரி குழந்தையாய் இருந்தபோது, அர்மேனியாவின் முதலாம் Khosrov அரசரைக் கொலை செய்தார். இதனால் அந்த அரசர் இறந்துகொண்டிருந்தபோது, கிரகரியின் குடும்பம் முழுவதையும் அழிக்குமாறு கட்டளையிட்டு இறந்தார். இந்த வன்முறையிலிருந்து குழந்தை கிரகரியைக் காப்பாற்றுவதற்காக, அவரை செசாரியாவுக்கு கடத்தினர். துருக்கி நாட்டின் மத்திய கிழக்கிலுள்ள கப்பதோசியா நகரில் ஒரு கிறிஸ்தவக் குடும்பத்திடம் இவர் கொடுக்கப்பட்டார். விவிலியம் மற்றும் கிறிஸ்தவ விசுவாசத்தில் வளர்க்கப்பட்ட இவர், தற்போதைய துருக்கி நகரமான Kayseri என்ற, அக்காலத்திய செசாரியாவில் கல்வி பயின்றார். கிரகரி அவர்கள், திருமுழுக்குப் பெற்று, பின்னாளில் திருமணம் செய்து இரு மகன்களுக்கும் தந்தையானார். தனது தந்தையின் கொலைச் செயல் பற்றி, ஆசிரியர்கள் வழியாக அறிய வந்தார். அரசர் Khosrovவின் மகன் Tiridates ஆட்சியில் அமர்ந்தபோது, கிரகரி, அரசரிடம் சென்று மன்னிப்பு கேட்டார். இதனால், கிரகரி, அர்மேனியா திரும்புவதற்கு அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், அர்மேனியாவில் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக இருந்து, மக்கள் கிறிஸ்தவராக மாறும் செயல்களில் ஈடுபட்டதால் அரசரின் கோபத்திற்கு ஆளானார் கிரகரி. இவ்வாறு Agathangelos என்பவர் எழுதி வைத்துள்ளார். அரசர், Tiridates, கிரகரியை சித்ரவதை செய்தார். தலைகீழாகத் தொங்கப் போட்டு, கை கால்களை மரத்தூண்களில் கட்டி வைத்து கசையடிகள் கொடுத்தார். வெளிநாட்டவராக இங்கு வந்து அடைக்கலம் தேடிய நீ, நான் வணங்கும் Anahit கடவுளை வணங்க எப்படி மறுக்கலாம்? என்று கேள்வி கேட்டு, மேலும் கொடிய சித்ரவதைகளுக்கு உட்படுத்தினார் அரசர். .இவ்வளவு கொடுமைகளுக்குப் பின்னும், கிரகரி, அரசரின் கடவுளை வணங்க மறுத்து, கிறிஸ்தவத்தில் உறுதியாய் இருந்ததால், இறந்த உடல்கள் மற்றும் குப்பைகள் நிறைந்த ஓர் அறையில் கிரகரியை அடைப்பதற்கு அரசர் ஆணையிட்டார். கிரகரி அவர்கள், அந்த இருட்டறைச் சிறையில் 13 ஆண்டுகள் உயிரோடு இருந்தார்.

இதற்குப்பின் நடந்தது என்ன அடுத்தவார நிகழ்ச்சியில் கேட்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.