2017-10-17 16:15:00

மியான்மாரில் புத்த, கிறிஸ்தவர்களுக்கு திருத்தூதுப்பயணம்...


அக்.17,2017. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற நவம்பர் 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை, மியான்மார் நாட்டிற்கு மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப்பயணத்தை, அந்நாட்டின் புத்த மதத்தினரும், கிறிஸ்தவர்களும் ஆவலோடு எதிர்நோக்கியிருக்கின்றனர் என்று, பீதேஸ் செய்தி கூறுகின்றது.

திருத்தந்தையை எங்கள் நாட்டிற்கு ஆவலோடு வரவேற்கிறோம் என்ற வாசகத்துடன், பெரிய விளம்பரம் ஒன்று, யாங்கூன் பேராலயத்தின் முகப்பில் வைக்கப்பட்டுள்ளது. 

அமைதி மற்றும் ஒப்புரவு என்ற தலைப்பை, இத்திருத்தூதுப்பயணத்திற்கு திருத்தந்தை தேர்ந்தெடுத்திருப்பது, மியான்மார் மக்கள் ஒவ்வொருவருக்கும் மிகவும் முக்கியமானது என்றும், கடந்த காலத்தில் மிகவும் துன்பங்களை அனுபவித்துள்ள இந்நாடு, தற்போது சுதந்திரத்திற்குத் திறந்த மனதாய் உள்ளது என்றும், Pathein மறைமாவட்ட இளம் கத்தோலிக்கர் Zarni Saya கூறினார்.

திருத்தந்தையின் மியான்மார் திருத்தூதுப்பயணம் பற்றி கருத்து தெரிவித்த, புத்தமத துறவியான Sucitta அவர்கள், திருத்தந்தையின் பிரசன்னம், ஒவ்வொருவரிலும், நன்மையை விதைக்கும் மற்றும், மியான்மார் சமுதாயம் புதுப்பித்தலுக்கு வழியைக் கண்டுபிடிக்கும் என்றும் கூறினார்.

ஐந்து கோடியே பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வாழ்கின்ற மியான்மாரில், 88.9 விழுக்காட்டினர் புத்த மதத்தினர். மேலும், கிறிஸ்தவர்கள் 6.3 விழுக்காட்டினர். முஸ்லிம்கள் 2.3 விழுக்காட்டினர். ஏறத்தாழ ஏழு இலட்சம் கத்தோலிக்கர் 16 மறைமாவட்டங்களில் உள்ளனர்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.