2017-10-17 15:49:00

அறிவிலிகள், இறைவார்த்தையை கேட்பதற்கு திறனற்றவர்கள்


அக்.17,2017. இறைவார்த்தையைக் கேட்பதற்கு திறனற்றவர்களாகிய அறிவிலிகள், வெளித்தோற்றங்களையும், சிலைகளையும், கருத்தியல்களையும் விரும்புகின்றனர் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாய் காலை மறையுரையாற்றினார்.

ஆயரும், மறைசாட்சியுமான அந்தியோக்கு நகர் புனித இஞ்ஞாசியார் விழாவான இச்செவ்வாய் காலையில், வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில், இறைவார்த்தையைக் கேட்பதற்குத் திறனற்ற அறிவிலிகள் பற்றிய சிந்தனைகளை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்நாளைய திருப்பலியின் இரு வாசகங்களில், அறிவிலிகள் என்ற சொல்லாடல் இருமுறை வந்திருப்பதைக் குறிப்பிட்டுச் சொன்ன திருத்தந்தை, நற்செய்தியில் (லூக்.11: 37-41), இயேசு பரிசேயர்களையும், முதல் வாசகத்தில் பவுலடிகளார் உரோமையருக்கு எழுதிய திருமடலில் (உரோ.1:16-25), இறைப்பற்று இல்லாதவர்களையும், அறிவிலிகளே என்று சொல்கின்றனர் என்று கூறினார்.

இயேசு சட்ட வல்லுனர்களிடம், வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளை அவர்கள் ஒத்து இருக்கின்றனர், ஏனென்றால், அவர்கள் வெளிப்புறத்தில் அழகாய் உள்ளது பற்றி மட்டும் கவலைப்பட்டு, மாசடைந்துள்ள உட்புறத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை என்று சொல்கிறார் என்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தற்பெருமை, வெளித்தோற்றம், வெளிப்புற அழகு, வெளிப்புற நீதி ஆகியவற்றால் பரிசேயர்களின் உள்ளம் மாசடைந்துள்ளது என்றும் கூறியத் திருத்தந்தை, இக்கால கிறிஸ்தவர்களின் அறிவின்மை பற்றியும் மறையுரையில் விளக்கினார்.

கருத்தியல்களுக்கு தங்களை விற்கும் கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவர்களாக இல்லாமல், கிறிஸ்தவத்தின் கருத்தியல்களாக மாறுகின்றனர் என்றும், இந்த மூன்று குழுவினருமே, தங்களின் அறிவின்மையால், இறுதியில் மாசடைந்த நிலைக்கு உள்ளாகின்றனர்  என்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அறிவின்மை என்பது, செவிசாய்க்காத ஒரு தன்மை என்றும், கேட்கும் திறனின்மை சீரழிவுக்கு இட்டுச் செல்லும் என்றும், இறைவார்த்தை இவர்களில் நுழையாததால், அன்புக்கும், இறுதியில் சுதந்திரத்திற்கும் இடமில்லாமல் போய்விடும் எனவும் எச்சரித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இறைவார்த்தை நம்மில் நுழைவதற்கு நாம் அனுமதிக்கின்றோமா என்று சிந்திக்கவும் அழைப்பு விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அறிவிலிகளாக நாம் இருக்க வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.