2017-10-16 15:37:00

பசி, காலநிலை மாற்றத்திற்கெதிராய் மேலும் நடவடிக்கை எடுக்க...


அக்.16,2017. பசி, போர், காலநிலை மாற்றம் ஆகியவை பற்றிய பேச்சுக்களைக் குறைத்து, அவற்றுக்கு எதிராக, அதிகமான நடவடிக்கைகளை எடுக்குமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக அரசுகளைக் கேட்டுக்கொண்டார்.

உலக உணவு தினமான அக்டோபர் 16, இத்திங்கள் காலையில், உரோம் நகரிலுள்ள, FAO எனப்படும் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒன்றோடொன்று தொடர்புடைய, பசி, போர், காலநிலை மாற்றம், கட்டாயப் புலம்பெயர்வு ஆகியவற்றின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுமாறு, உலக சமுதாயத்தை வலியுறுத்தினார்.

காலநிலை மாற்றம் குறித்த உலகளாவிய ஒப்பந்தத்திலிருந்து சிலர் விலகிச் செல்வது கவலை தருகின்றது என்றும், மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தல், உணவளிக்கப்படுபவரின் எண்ணிக்கையைக் குறைத்தல் போன்றவை, பிரச்சனைக்குத் தீர்வு காணாது என்றும், பகிர்வுப் பண்பு உலகுக்குத் தேவைப்படுகின்றது, இதற்கு மனமாற்றம் அவசியம் என்றும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ் .

அடுத்திருப்பவர் மீது அன்புகூருதல் என்பது நற்செய்தி கோட்பாடு எனவும், இது பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மதங்களிலும் கூறப்பட்டுள்ளது எனவும், பன்னாட்டு உறவுகளின் மொழியில், இது மனிதாபிமான கோட்பாடாக மாறுகிறது எனவும், தூதரக உறவுகளிலும், பன்னாட்டு நிறுவனங்களிலும், அன்புகூர்வதற்கான திறமை பேணப்பட்டு ஊக்குவிக்கப்பட வேண்டும் எனவும், இதுவே உணவுப் பாதுகாப்பு மற்றும் மனிதப் பாதுகாப்புக்கு உறுதி வழங்குவது எனவும், திருத்தந்தை கூறினார்.

FAO நிறுவனத்தில் கடைப்பிடிக்கப்பட்ட இந்த உலக உணவு தின நிகழ்வில், திருத்தந்தையுடன், ஜி7 என்ற தொழில்வளர்ச்சியடைந்த நாடுகளின் வேளாண் துறை அமைச்சர்களும் கலந்துகொண்டனர். 

FAO நிறுவனத்தின் கணிப்புப்படி, உலகில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருள்களில் மூன்றில் ஒரு பகுதி, அதாவது ஏறத்தாழ 130 கோடி டன் உணவுப் பொருள்கள், ஒவ்வோர் ஆண்டும் வீணாக்கப்படுகின்றது. ஒவ்வோர் ஆண்டும் பணக்கார நாடுகள், 22 கோடியே 22 இலட்சம் டன் அளவிலான உணவுப் பொருள்களை வீணாக்குகின்றன. இந்த அளவு, ஆப்ரிக்காவின் சகாராவையடுத்த பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் உணவுப்பொருள்களுக்கு (23 கோடி டன்கள்) ஏறத்தாழ சமமாக உள்ளது.

மேலும், இந்நிகழ்வில், முதலில் வரவேற்புரையாற்றிய, FAO நிறுவனத் தலைவர், Jose' Graziano da Silva அவர்கள், இன்றைய உலகில், ஏறத்தாழ 74 கோடிப் பேர் புலம்பெயர்ந்தவர்கள். இந்த அளவு எண்ணிக்கை, உலகில் இதுவரை இருந்ததில்லை என்று, திருத்தந்தையிடம் தெரிவித்தார்.

“புலம்பெயர்வின் வருங்காலத்தை மாற்றுவதற்கு”என்ற தலைப்பில், இத்திங்களன்று உலக உணவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

மேலும், இந்நிகழ்வின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2015ம் ஆண்டு செப்டம்பரில் மத்திய தரைக்கடலைக் கடந்தபோது, நீரில் மூழ்கி இறந்த மூன்று வயது அகதிச் சிறுவன் Aylan Kurdiயின், பளிங்குகல்லில் வடிக்கப்பட்ட உருவச் சிலையை, FAO நிறுவனத்திற்குப் பரிசாக வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.