2017-10-14 15:11:00

வின்சென்ட் தெ பால் குழுமத்திற்கு திருத்தந்தை உரை


அக்.14,2017. எடுத்துக்காட்டான சிறந்த பிறரன்புச் செயல்கள், எப்போதும் எந்த உதவியும் செய்வதற்குத் தயாராக இருத்தல், நல்லிணக்கம் ஆகியவை வழியாக, ஒவ்வொரு நாளும் உலகில், இறையன்பைத் தொடர்ந்து வெளிப்படுத்துமாறு, வின்சென்ட் தெ பால் குழுமத்திற்கு அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித வின்சென்ட் தெ பால் அவர்கள், எல்லாவற்றையும் துறந்து, ஏழைகளுக்குச் சேவையாற்ற வேண்டும் என்ற அழைப்பைப் பெற்ற நானூறாம் ஆண்டைச் சிறப்பிக்கும், அக்குழுமத்தின் 11 ஆயிரம் உறுப்பினர்களை, இச்சனிக்கிழமை நண்பகலில், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்குழுமத்தினர், தெருக்களில் உள்ள ஏழைகளுக்கு ஆற்றும் நற்பணிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

நூற்றாண்டுகளுக்கும் நிலைத்து இருக்கக்கூடிய ஒரு பிறரன்பை, புனித வின்சென்ட் ஆரம்பித்தார் எனவும், இப்புனிதருக்கு இந்த உள்தூண்டுதல் கிடைத்ததன் நானூறாம் ஆண்டில், கிறிஸ்தவ வாழ்வுக்கு முக்கியமான, வழிபடுதல், வரவேற்றல், செல்லுதல் ஆகிய மூன்று தலைப்புகளில் சிந்தனைகளை வழங்க விரும்புவதாகவும் திருத்தந்தை கூறினார்.

புனித வின்சென்ட் அவர்களுக்கு, செபம் முக்கியமானதாக இருந்தது என்றும், இறைவனை வழிபடுகின்றவர்கள், நம் ஆண்டவர் போன்று, அடுத்திருப்பவரிடம் மிகவும், இரக்கத்துடனும், கனிவுடனும் இருந்து, உதவிகள் செய்வதற்கு எப்போதும் தயாராக இருப்பார்கள் என்றும் திருத்தந்தை கூறினார்.

வரவேற்றல் என்ற சொல்லாடலைக் கேட்டவுடனே, ஏதோ ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற சிந்தனை நமக்கு உடனடியாக எழுகின்றது, ஆனால், இதன் பொருள் மிகவும் ஆழமானது என்றுரைத்த திருத்தந்தை, மற்றவரை வரவேற்கும் கிறிஸ்தவர், திருஅவையின் உண்மையான மனிதர்கள் என்றும் கூறினார்.

செல்லுதல் என்பதையும் விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு பங்குத் தளத்திற்கு அல்லது ஒரு மறைமாவட்டத்திற்கு மட்டும் நாம் செல்வது அல்ல, மாறாக, இவ்வுலகின் எல்லாப் பகுதிகளுக்கும் செல்வதாகும் என்றும், வின்சென்ட் தெ பால் குழுமத்தினரிடம் விளக்கினார்.

Vincentian Family எனப்படும், வின்சென்ட் தெ பால் குழுமத்தினர், அனைத்துக் கண்டங்களிலும், எண்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில், ஏறத்தாழ 225 குழுக்களாக, பல்வேறு துறவற இல்லங்கள் மற்றும், பொதுநிலை விசுவாசிகள் கழகங்களாகப் பணியாற்றி வருகின்றனர். வீடற்றவர்கள், புலம்பெயர்ந்தவர்கள், கைவிடப்பட்ட சிறார், திருமணமாகாத தாய்மார் ஆகியோருக்கு, இக்குழுமத்தினர் சேவையாற்றுகின்றனர்.  

புனித வின்சென்ட் தெ பால் அவர்கள், 1617ம் ஆண்டில், ஏழைகளுக்குச் சேவையாற்ற வேண்டும் என்ற அழைப்பைப் பெற்றார். இந்த நானூறாம் ஆண்டை முன்னிட்டு, இக்குழுமத்தினர், அக்டோபர் 12, கடந்த வியாழனன்று தொடங்கிய நான்கு நாள் பன்னாட்டு கூட்டம், இஞ்ஞாயிறன்று நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.