2017-10-14 15:49:00

மனித வாழ்வை பாதுகாத்து பேணுவதற்கு அழைக்கப்பட்டுள்ளோம்


அக்.14,2017. “தாயின் உதரத்திலும், அதன் குழந்தைப் பருவத்திலும், முதிர்ந்த வயதிலும், உடல் அல்லது மன வளர்ச்சிக்குறை உள்ள நிலையிலும், மனித வாழ்வைச் சிறப்பாகப் பாதுகாத்து பேணுவதற்கு நாம் அழைக்கப்பட்டுள்ளோம்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டரில் இச்சனிக்கிழமையன்று வெளியாயின.

மேலும், நைஜீரியாவில், இத்தாலிய அருள்பணியாளர் Maurizio Pallù அவர்கள் கடத்தப்பட்டிருக்கும் தகவல், திருத்தந்தைக்கு அறிவிக்கப்பட்டு, அவரின் விடுதலைக்காக திருத்தந்தை செபித்து வருகிறார் என்று, திருப்பீட செய்தித் தொடர்பாளர், கிரெக் பர்க் அவர்கள், தன் டுவிட்டரில், இவ்வெள்ளிக்கிழமையன்று செய்தி வெளியிட்டுள்ளார்.  

மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் தென் பகுதி நகரமான பெனினில் மறைப்பணியாற்றிவரும், 63 வயது நிரம்பிய இத்தாலிய அருள்பணியாளர் Pallù அவர்களும், அவரோடு சேர்ந்த நால்வரும் கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் கடத்தப்பட்டதற்குரிய காரணம் இதுவரை தெரியவில்லை என்று, செய்திகள் கூறுகின்றன.

உலக உணவு தினமான அக்டோபர் 16, வருகிற திங்களன்று, உரோம் நகரிலுள்ள, FAO எனப்படும், ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத்திற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செல்கிறார். கடந்த ஆண்டும் உலக உணவு தினத்தன்று, திருத்தந்தை, FAO நிறுவனம் சென்றார்.

 “புலம்பெயர்வின் வருங்காலத்தை மாற்றுவதற்கு” என்பது, 2017ம் ஆண்டின் உலக உணவு தினத்தின் தலைப்பாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.