2017-10-13 16:59:00

திருப்பீடம், ஜப்பானுக்கு இடையே தூதரக உறவின் 75 ஆண்டுகள்


அக்.13,2017. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜப்பானியர்களின் பழம்பெருமை மிக்க ஞானத்தை மிகவும் வியக்கின்றார் என்றும், ஜப்பான் மற்றும் ஆசியா முழுவதிலும் இருக்கின்ற திருஅவை மீது சிறப்பு அன்பு கொண்டுள்ளார் என்றும் கூறினார், திருப்பீட உயர் அதிகாரி ஒருவர்.

திருப்பீடத்திற்கும், ஜப்பானுக்கும் இடையே தூதரக உறவுகள் உருவானதன் 75ம் ஆண்டையொட்டி, உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில், இவ்வியாழன் மாலையில் உரையாற்றிய, திருப்பீட பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்கள், திருப்பீடத்திற்கும், ஜப்பானுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவும் நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு குறித்து விளக்கினார்.

இயேசு சபையினருக்கும், உதிக்கும் கதிரவன் பேரரசு எனப்படும் ஜப்பானுக்கும் இடையே நிலவும் சிறப்பு உறவுகள் பற்றியும் குறிப்பிட்ட, பேராயர் காலகர் அவர்கள், ஜப்பானிய மண்ணில் காலடி பதித்த, முதல் மறைப்பணியாளர் இயேசு சபையின் புனித பிரான்சிஸ் சவேரியார் என்ற விவரங்களையும் எடுத்துரைத்தார்.   

ஜப்பானிய கலாச்சாரம் மற்றும் ஞானத்தின் மீது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பது குறித்தும் கூறிய பேராயர் காலகர் அவர்கள்,  அமைதியின் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்புவதில், ஜப்பான் அதிகாரிகளுடன் திருப்பீடம் தொடர்ந்து ஒத்துழைக்கும் எனவும், ஜப்பான் தலத்திருஅவையின் வளர்ச்சிக்கு உதவும் எனவும் உறுதி கூறினார்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.