2017-10-13 16:28:00

திருத்தந்தை : இலங்கை திருத்தூதுப்பயணம் ஒரு சிறப்பு வரம்


அக்.13,2017. இலங்கையில் பல ஆண்டுகளாக இடம்பெற்ற போர் மற்றும், துன்பங்களுக்குப் பின், ஒப்புரவு மற்றும் குணப்படுத்துதல் நோக்கி நாட்டைக் கட்டியெழுப்பும் தருணத்தில், அந்நாட்டிற்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொள்ள தனக்கு கிடைத்த வாய்ப்பை, கடவுளின் ஒரு சிறப்பு வரமாகக் கருதுகிறேன் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று கூறினார்.

2015ம் ஆண்டு சனவரி 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை இடம்பெற்ற, இலங்கை திருத்தூதுப்பயணத்தின் நிர்வாகக் குழு மற்றும், அக்குழுவின் குடும்பத்தினர் ஐம்பது பேரை, இவ்வெள்ளியன்று, திருப்பீடத்தில் சந்தித்து, அத்திருத்தூதுப்பயணம் பற்றிய பசுமையான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கொழும்பு விமான நிலையத்திலிருந்து நகருக்குச் சென்றபோது, சாலையில் நாற்பது யானைகள் அணிவகுத்துச் சென்றதையும், அப்பயணத்தில் தனக்கு கிடைத்த அமோக வரவேற்பையும் மகிழ்வோடு குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, இந்தியப் பெருங்கடலின் முத்தாகிய இலங்கையின், மாபெரும் மறைபோதகர் ஜோசப் வாஸ் அவர்களை, புனிதர் என அறிவித்த மிக அழகான நிகழ்வு, உள்ளத்தைத் தொட்டது என்றும் கூறினார்.

இலங்கையில் புகலிடம் மற்றும், ஒப்புரவின் அடையாளமான, மடு மாதா திருத்தலத்தைச் சுற்றி, பெருந்திரளான மக்கள் செபச்சூழலில் கூடியிருந்ததையும் குறிப்பிட்ட திருத்தந்தை, இலங்கை மக்கள் மற்றும் தலைவர்களை, இவ்வன்னையின் அரவணைப்பில் வைப்பதாகவும், இத்திருத்தூதுப்பயணத்திற்கு உழைத்த எல்லாருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.