2017-10-13 16:45:00

சிறப்பு ஒலிம்பிக் கால்பந்து வீரர்களுக்கு வாழ்த்து


அக்.13,2017. உரோம் நகரின், 11ம் பயஸ் விளையாட்டு மையத்தில் இவ்வெள்ளியன்று ஆரம்பித்துள்ள Torneo Unified கால்பந்து விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளும், சிறப்பு ஒலிம்பிக் கால்பந்து வீரர்களுக்கு, தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் தன்னை சந்தித்த, இவ்விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளும் 350 பேருக்கு வாழ்த்து தெரிவித்த திருத்தந்தை, முற்சார்பு எண்ணங்களுக்கும், புறக்கணிப்புக்கும் உள்ளாகும், தனியாட்கள் மற்றும் மக்களின்  மாண்பு மதிக்கப்படுவதற்கு, இவ்விளையாட்டு, அனைவரின் கண்களையும் இதயத்தையும் திறப்பதாய் உள்ளது என்றும் கூறினார்.

அறிவு குன்றிய மாற்றுத்திறனாளி வீரர்கள் ஒன்றிணைந்து விளையாடுவதன் வழியாக,  Unified விளையாட்டின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதற்கு, இந்த நாள்கள் வாய்ப்பை வழங்குகின்றன எனவும், திருத்தந்தை கூறினார்.

விளையாட்டு, உலகளாவிய மொழி எனவும், புறக்கணிப்பு, வறுமை மற்றும் காயமுற்றுள்ள பல தனியாட்களின் வாழ்க்கையை, பிறருக்கு எடுத்துச்சொல்வதற்குத் தூண்டுதலாக, இது அமைகின்றது எனவும் திருத்தந்தை கூறினார்.    

அக்டோபர் 13, இவ்வெள்ளி முதல், அக்டோபர் 15 வருகிற ஞாயிறு வரை, Unified கால்பந்து போட்டி உரோம் நகரில் நடைபெறுகின்றது. Knights of Columbus அமைப்பின் ஆதரவுடன் நடைபெறும் இப்போட்டியில், லித்துவேனியா, பிரான்ஸ், போலந்து, ஹங்கேரி, இஸ்பெயின், போர்த்துக்கல், பெல்ஜியம், ருமேனியா, இத்தாலி ஆகிய ஒன்பது நாடுகளிலிருந்து 18 முதல் 30 வயதுக்குட்பட்ட வீரர்கள் கலந்துகொள்கின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.