2017-10-13 16:51:00

கலிஃபோர்னியா காட்டுத்தீ, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு செபம்


அக்.13,2017. அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிஃபோர்னியாவில் பரவியுள்ள காட்டுத்தீயால் ஏற்பட்டுள்ள உயிர்ச்சேதம் மற்றும் பொருள்சேதம் குறித்து கவலை தெரிவித்துள்ள அதேவேளை, இப்பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, திருத்தந்தையின் செபத்தையும், தோழமையையும் தெரிவிக்கும் தந்திச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

சான் பிரான்சிஸ்கோ பேராயர் Salvatore Joseph Cordileone, Los Angeles பேராயர் José Horacio Gómez ஆகிய இருவருக்கும் அனுப்பப்பட்டுள்ள இச்செய்தியில், இப்பேரிடரில் அவசரகால உதவிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு, திருத்தந்தையின் ஊக்கமும், செபங்களும், ஆசீரும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

21 இடங்களில் பரவியுள்ள இக்காட்டுத் தீயை அணைப்பதற்கு கடும் முயற்சிகள் இடம்பெற்றுவரும்வேளை, இப்பேரிடரால், குறைந்தது முப்பது பேர் இறந்துள்ளனர், இருபதாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் புலம்பெயர்ந்துள்ளனர் மற்றும், 400 பேர் வரை காணாமல் போயுள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகளும், தொழிலகங்களும், கட்டடங்களும் சேதமாகியுள்ளன.

மேலும், பிரேசில் நாட்டின் Janaúba பள்ளியில் இடம்பெற்ற தீ விபத்தில் பலியானவர்கள் காயமுற்றவர்கள், மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு, திருத்தந்தையின் செபத்தையும், தோழமையையும் தெரிவிக்கும் தந்திச் செய்தி ஒன்றை, கர்தினால் பரோலின் அவர்கள், அந்நாட்டிற்கு அனுப்பியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.