2017-10-12 16:28:00

கத்தோலிக்க மறைக்கல்வியின் முக்கியத்துவம்


அக்.12,2017. விசுவாசத்தைப் பாதுகாத்து, தன் பாதையைத் தொடர்ந்து பின்செல்லும் பண்பை, கத்தோலிக்கத் திருஅவை, இயல்பிலே கொண்டுள்ளது, இதன் வழியாக, இயேசுவின் நற்செய்தியிலுள்ள உண்மை, உலகம் முடிவுவரை அதன் முழுமையில் வளரும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதன் மாலையில் கூறினார்.

கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி அறிவிக்கப்பட்டதன் 25ம் ஆண்டு நிறைவைமுன்னிட்டு, திருப்பீடத்தின் புதியவழி நற்செய்தி அறிவிப்பு அவை ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில், இப்புதன் மாலையில் உரையாற்றிய திருத்தந்தை, இவ்வாறு கூறினார்.

இயேசு கிறிஸ்து என்ற மனிதரில் புதைந்துள்ள, வற்றாத, வளமையான செல்வத்தை  நம் காலத்திய மக்கள் கண்டுணர்வதற்கு, கிறிஸ்தவ நம்பிக்கையிலிருந்து பிறக்கும் மகிழ்வோடும், இரக்கத்தின் மருந்தோடும், அவர்களை நாம் அணுக வேண்டும் என்றும்,   திருத்தந்தை கூறினார்.

மறைக்கல்வி, திருஅவையின் வற்றாத போதனைகளை விசுவாசிகளுக்கு வழங்கும் ஒரு முக்கியமான கருவி என்றும், மறைக்கல்வியின் உதவியுடன், விசுவாசிகள், விசுவாசத்தைப் புரிந்துகொள்வதில் வளர இயலும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

தன் உரையில் மரண தண்டனைகள் பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, மரண தண்டனை, எந்த அடிப்படையில் நிறைவேற்றப்பட்டாலும், அது மனிதாபிமானமற்ற நடவடிக்கை எனவும், இது, மனித மாண்பை தரம் தாழ்த்துகின்றது என்றும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.