2017-10-09 16:24:00

கீழை வழிபாட்டுமுறை கத்தோலிக்கத் திருஅவைகளின் தலைவர்கள்


அக்.09,2017. கீழை வழிபாட்டுமுறை கத்தோலிக்கத் திருஅவைகளின் முதுபெரும் தந்தையர் மற்றும், தலைமைப் பேராயர்கள் 13 பேரை, இத்திங்களன்று வத்திக்கானில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தந்தையர் மேய்ப்புப்பணியாற்றும் விசுவாசிகளின் இன்பங்கள் மற்றும், துன்பங்களில், தானும் பங்குகொள்வதில் மகிழ்வதாகத் தெரிவித்தார்.

தூய பேதுருவின் வழிவரும் உரோம் ஆயருடன், இத்தலைவர்கள் ஒன்றித்து செயல்படுவதற்கு, தனது நன்றியைத் தெரிவித்த திருத்தந்தை, உரோம் ஆயராக இருப்பது, பேதுருவின் திருப்பணியின் அடித்தளமாக அமைந்துள்ளது என்றும் கூறினார்.

திருத்தூதர் மத்தியாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது (திரு.பணிகள்,1.15-26) போன்று, தூய பேதுருவின் வழிவருபவரின் பணிகளில் ஒன்று, உலகில் பரந்து விரிந்துள்ள தலத்திருஅவைகளுக்கு நல்ல ஆயர்களைத் தேர்ந்தெடுப்பதாகும், கீழை வழிபாட்டுமுறை கத்தோலிக்கத் திருஅவைகளின் தலைவர்களும், திருஅவைகளின் மாமன்றங்களும், நல்லவர்களைத் தேர்ந்தெடுக்கும் இந்த முக்கியமான பணியில் தன்னுடன் ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை.

இறுதியில், முதுபெரும் தந்தையரும், தலைமைப் பேராயர்களும், தன்னிடம் கேட்க விரும்புவதற்குப் பதில் சொல்ல விழைவதாகத் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், அர்ஜென்டீனா நாட்டின் Tucumán பல்கலைக்கழகத்தின், இருபது பேர் கொண்ட பிரதிநிதிகள் குழுவையும், இத்திங்களன்று சந்தித்தார், திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.