2017-10-09 16:45:00

கிறிஸ்தவத்தின் மாபெரும் புதினம் இறை இரக்கம்


அக்.09,2017. நாம் நம் தவறுகளாலும், பாவங்களாலும் இறைவனை ஏமாற்றம் அடையச் செய்திருந்தாலும், இறைவன் தம் வார்த்தையில் மாறாதவர் மற்றும், எல்லாவற்றுக்கும் மேலாக, அவர் பழிவாங்காதவர் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று கூறினார்.

இதுவே கிறிஸ்தவத்தின் மாபெரும் புதினம் என்றும், இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகமான (மத்.21:33-43) கொடிய குத்தகைக்காரர் உவமையில் இது, தெளிவாகத் தெரிகின்றது என்றும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இஞ்ஞாயிறு நண்பகலில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திராட்சைத் தோட்டத் தொழிலாளர்கள், ஒரு கட்டத்தில், அத்தோட்டத்தின் பலன்களைத் திருப்பித்தர மறுத்து, அதன் உரிமையாளரின் பணியாளர்களையும், அவரின் மகனையும் கொலைசெய்த நிகழ்வு இந்த உவமையில் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

கடவுள் மனித சமுதாயத்தோடு உடன்படிக்கை ஏற்படுத்தி, அதில் நாம் பங்குகொள்ள அழைப்பு விடுப்பதாய் உள்ள இந்த உவமைக் கதை, நமக்கும் பொருந்தும் எனவும் விளக்கினார், திருத்தந்தை.

நம் தந்தையாம் கடவுளின் அன்பிற்கும், அவரின் உடன்படிக்கைக்கும் நாம் எதிர்ப்பு தெரிவித்து புறக்கணிக்கும்வேளையில், அவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதை, திராட்சைத் தோட்ட உரிமையாளரின் கேள்வியால் நாம் புரிந்துகொள்கிறோம் என்றும், நம் பலவீனம் மற்றும் பாவங்களால் கிறிஸ்துவை நாம் புறக்கணித்தாலும், கடவுள் தம் திராட்சைத் தோட்டத்தில், தம் இரக்கமாகிய புதிய இரசத்தை தொடர்ந்து வழங்குகிறார் என்றும் திருத்தந்தை கூறினார்.

கிறிஸ்தவத்தின் மாபெரும் புதினம் இறைவனின் இரக்கம் எனவும், எல்லாரின் நன்மைக்காக கடவுள் நட்டுவைத்துள்ள திராட்சையாக, சமுதாயத்தின் அனைத்து இடங்களிலும், குறிப்பாக, சமுதாயத்தின் விளிம்புகளில் நாம் வாழவேண்டுமெனவும், மூவேளை செப உரையில் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.