2017-10-04 16:55:00

சாம்பலில் பூத்த சரித்திரம் : பெர்சியாவில் கிறிஸ்தவம் பாகம் 4


அக்.04,2017. பெர்சியாவில், தொடக்கத்தில் செசானியன் பேரரசின் அரசர்கள் கிறிஸ்தவர்களிடம் மிகவும் சகிப்புத்தன்மையுடன் நடந்துகொண்டாலும், சமய மற்றும் அரசியல் காரணங்களால், கிறிஸ்தவர்களை மிகவும் துன்புறுத்தி கொலை செய்தனர். அரசர் 2ம் சப்போர் (Saphor II) ஆட்சியில், ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள், நூற்றுக்கணக்கான ஆயர்கள், அருள்பணியாளர்கள் மற்றும் பொதுநிலையினர் துன்புறுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டனர். இவரது ஆட்சி காலத்தில் கிறிஸ்தவர்கள் இருமடங்காக வரிசெலுத்த கட்டாயப்படுத்தப்பட்டனர். இந்த வரியை ஆயர்களே வசூலித்துக் கொடுக்க வேண்டுமெனவும் நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதனைச் செய்ய மறுத்த ஆயர்கள் உடனடியாக கொலை செய்யப்பட்டனர். அதேநேரம், பெர்சியாவில் கிறிஸ்தவம் பரவியதால், சில நேர்மறை தாக்கங்களும் இடம்பெற்றன என, வரலாற்று ஏடுகள் கூறுகின்றன. பெர்சியாவில் சிரியாக் மொழி காக்கப்பட்டது. பெர்சியாவின் நிர்வாக மையம், செலுசியாவுக்கும், இறையியல் மையம், எடிசாவிலிருந்து நிசிபிஸ் நகருக்கும் மாற்றப்பட்டன. இதனால், பெர்சியக் கிறிஸ்தவர்கள், உரோமையர்கள் மற்றும் மேற்கத்திய கிரேக்கர்களுடன் உறவுகளை உருவாக்கிக் கொண்டனர். இதன் பயனாக, கிழக்கில், இந்தியாவின் புனித தோமையார் கிறிஸ்தவர்களுடன் புதிய உறவுகள் வளர்ந்தன. செசானியன் தலைமுறை ஆட்சி முடிவதற்குள், கிறிஸ்தவம் சீனாவின் மையப்பகுதியில் பரவி விட்டது. பெர்சிய அரசின் கொள்கைகள் தளர்த்தப்பட்டதால், கிறிஸ்தவத்திற்கு வளமையான புதிய காலம் தொடங்கியது. முக்கியமான பிரபுக்கள் கிறிஸ்தவத்தைத் தழுவினர்.

நான்காம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே, செலுசியாவின் ஆயர் Papa Bar Aggai அவர்கள் தலைமையில், பெர்சியத் திருஅவையை தேசிய நிறுவனமாக அமைக்கும் முயற்சிகள் இடம்பெற்றன. கி.பி.410ம் ஆண்டில் நடைபெற்ற பொதுச் சங்கத்தில், இம்முயற்சி வெற்றி பெற்றது. கி.பி.300க்கும், 500ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட 200 ஆண்டுகளில், பெர்சியாவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பெருமளவில் வளர்ந்தது. கிறிஸ்தவம், பல அரசுகளால் அரசு மதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. Edessa, பார்த்தியாவிலுள்ள Arbela, இந்தியா ஆகியவை, கிறிஸ்தவத்தின் தொடக்க கால மையங்களாக இருந்தன. பெர்சியப் பேரரசில், இஸ்லாம் அரசு மதமாக இருந்தபோதிலும், கிறிஸ்தவமும் நீண்டகாலமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. நாட்டில் கிறிஸ்தவம் எப்போதும் சிறுபான்மையாகவே இருந்து வந்தது. இஸ்லாமியர் பெர்சியாவைக் கைப்பற்றுவதற்கு முன்னர், அங்கு Zoroastria மதம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. பெர்சியப் பேரரசில், கிறிஸ்தவர்கள் விசுவாசத்தில் உறுதியாக இருந்தது, அதற்காக எண்ணற்றவர்கள் உயிரைத் தியாகம் செய்தது ஆகியவை, அப்பேரரசில் கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவின.       

உலகில் கிறிஸ்தவத்தை, ஒரு நாட்டின் மதமாக அங்கீகரித்த முதல் நாடு அர்மேனியா என்று பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள் நம்புகின்றனர். ஐரோப்பாவில் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றான அர்மேனியாவில், இன்றும் 95 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள். மிகவும் பக்தியுள்ள இந்நாட்டில் காணப்படும் பழங்கால நினைவுச்சின்னங்களும், கட்டடங்களும் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. கி.பி.301ம் ஆண்டில் இந்நாடு, கிறிஸ்தவ நாடாக மாறியது. ஆயினும், முதல் நூற்றாண்டில், அதாவது கி.பி.60க்கும் 68ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயேசுவின் திருத்தூதர்களான பர்த்தலேமேயு, ததேயுஸ் ஆகிய இருவரால் அர்மேனியாவில் கிறிஸ்தவம் பரவியது. காப்பதோச்சா மற்றும் அசோர்சட்டானிலிருந்து இவ்விருவரும் அர்மேனியா சென்று, அரச குடும்பத்தினருக்கும், பொது மக்களுக்கும் திருமுழுக்கு அளித்தனர். இவர்கள், அர்மேனிய உலகில் ஒளிரச்செய்பவர்கள் என அழைக்கப்படுகின்றனர்.

அர்மேனியா முதல் கிறிஸ்தவ நாடு என ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், தற்போதைய எத்தியோப்பியா, எரிட்ரியா நாடுகளே, முதலில் கிறிஸ்தவப் பகுதியாக அறிவிக்கப்பட்டது எனவும் சிலர் சொல்கின்றனர். எத்தியோப்பிய அரசியான கந்தகியின் நிதி அமைச்சர் திருமுழுக்கு பெற்றதை, புதிய ஏற்பாட்டில் திருத்தூதர் பணிகள் நூல் பிரிவு 8, 26 முதல்39 வரையுள்ள வசனங்களில் வாசிக்கிறோம். இயேசு கிறிஸ்து இறந்த சில காலத்திலே இது நடந்தது. செசாரியாவின் யுசேபியுஸ் என்ற, முதல் திருஅவை வரலாற்று ஆசிரியர், "திருஅவை வரலாறு (Ecclesiastical History)" என்ற தனது நூலில், எத்தியோப்பியா நிதி அமைச்சர் திருமுழுக்கு பெற்றபின், தன் நாட்டில் எவ்வாறு கிறிஸ்தவப் போதனைகளைப் பரப்பினார் என்பதை எழுதியுள்ளார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.