2017-10-03 16:26:00

உண்மையான சமூக முன்னேற்றம் மக்களை மையப்படுத்தியதாக..


அக்.03,2017. உண்மையான சமூக முன்னேற்றம் என்பது, ஒவ்வொரு மனிதர் மீது கவனம் செலுத்துவதற்கு அரசியல் துறையில் விருப்பமும், ஆர்வமும் உள்ளதாகவும்,   மக்களை மையப்படுத்தியதாகவும் அமைய வேண்டும் என்று, ஐ.நா.வில் திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் வலியுறுத்தினார்.

ஐ.நா. தலைமையகத்தில், இத்திங்கள், செவ்வாய் தினங்களில் நடைபெற்றுவரும், சமூக முன்னேற்றம் குறித்த, 72வது ஐ.நா. பொது அவையின் அமர்வில், இத்திங்களன்று உரையாற்றிய, ஐ.நா.வுக்கான திருப்பீட பிரதிநிதி பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், இவ்வாறு கூறினார்.

தற்போதைய புலம்பெயர்ந்தவர் மற்றும், குடிபெயர்ந்தவர் பிரச்சனை குறித்து, மிகுந்த கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், இம்மக்கள் பொருளாதாரக் காரணங்கள், அடக்குமுறைகள், அல்லது போர்கள் போன்று, எந்தவிதக் காரணங்களாலும் புலம்பெயர்ந்திருந்தாலும், அவர்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும் பேராயர் கூறினார்.    

பெற்றோரின்றி தனியாகப் புலம்பெயரும் சிறார் மற்றும் இளையோர் எதிர்கொள்ளும் நெருக்கடி குறித்தும் குறிப்பிட்ட பேராயர் அவுசா அவர்கள், ஒருங்கிணைந்த மனித முன்னேற்றம் பற்றியும், தற்போதைய உலகளாவிய பொருளாதார நிலைகள் பற்றியும் பேசினார்.

சமூக முன்னேற்றம் என்பது, இளையோர்க்கு மாண்புடன்கூடிய வேலைவாய்ப்பு வழங்கப்படுவதையும் உள்ளடக்கும் என்றும், இதை எதார்த்தமான நிலைக்குக் கொண்டுவருவதற்கு, இளையோர்க்கும், குறிப்பாக, இளம்பெண்கள் மற்றும் வளர்இளம்பருவச் சிறுமிகளுக்கும், சிறிய அளவில் கடன்தொகை வழங்கப்பட வேண்டும் என்றும் உரையாற்றினார், பேராயர் அவுசா.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.