2017-10-02 16:27:00

விண்ணகம் நோக்கிய நம் மண்ணகப் பயணத்தில் காவல்தூதர்கள்


அக்.02,2017. “காவல்தூதர் நம் நண்பர். இவரை நாம் பார்ப்பதில்லை, ஆனால், அவர் பேசுவதை நாம் கேட்கிறோம். விண்ணகம் நோக்கிய நம் மண்ணகப் பயணத்தில் அவர் நம்மோடு துணைவருகிறார்” என்று, இத்திங்களன்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

காவல்தூதர்களின் விழாவாகிய அக்டோபர் 2, இத்திங்களன்று, தன் டுவிட்டர் பக்கத்தில், நம் வாழ்வில் காவல்தூதர்களின் பிரசன்னம் பற்றி செய்தி வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், திருப்பீடத்திற்குரிய இஸ்பெயின் நாட்டின் புதிய தூதர் Gerardo Angel Bugallo Ottone அவர்களை, இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவரிடமிருந்து, பணிநியமன நம்பிக்கைச் சான்றிதழைப் பெற்றார்.

இன்னும், புனித குழந்தை தெரேசா விழாவான அக்டோபர் 01, இஞ்ஞாயிறன்று, அப்புனிதர் போன்று, நமக்காக சிறியவராக மாறிய கடவுளின் தாழ்மையிலிருந்து கற்றுக்கொள்வோம் என்ற வார்த்தைகளை, தன் டுவிட்டரில் வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

செசேனா, பொலோஞ்ஞா ஆகிய இரு நகரங்களுக்கு, இஞ்ஞாயிறன்று மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்ட, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிறரன்பு ஒருபோதும் ஒருவழியாக இருக்காது, அது எப்போதும் விநியோகித்துக்கொண்டே இருக்கும், ஒவ்வொருவரும் ஏதாவது ஒன்றைக் கொடுத்துப் பெறுகிறோம் என்றும், மதிப்போடும், அன்போடும் நோக்கும் மனிதரிடம், நாமும் கனிவின் புரட்சியை ஏற்படுத்தலாம் என்றும், தன் டுவிட்டர் செய்திகளில் கூறியுள்ளார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.