2017-09-27 15:50:00

மறைக்கல்வியுரை : ஆன்மீக வெற்றிடமே நம்பிக்கையின் பெரிய எதிரி


செப்.,27,2017. இதமான குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருக்க, சூரியக் கதிர்களும் இதமான வெப்பத்துடன் எங்கும் பரவியிருக்க, வத்திக்கானின் புனித பேதுரு பேராலய வளாகம் திருப்பயணிகளாலும் சுற்றுலாப் பயணிகளாலும் நிரம்பி வழிந்தது. கிறிஸ்தவ எதிர்நோக்கு என்ற தலைப்பில் தன் மறைக்கல்வித் தொடரை, கடந்த பல வாரங்களாக வழங்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரம், நம் கிறிஸ்தவ எதிர்நோக்கு, அதாவது, கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிராக இருப்பவைகள் குறித்து கவனமாகச் செயல்படுவதற்கு அழைப்பு விடுத்தார். முதலில் தூய பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் மடலிலிருந்து ஒரு பகுதி வாசிக்கப்பட்டது(4, 8-10). ‘உடற்பயிற்சி ஓரளவுதான் பயன் தரும். ஆனால், இறைப்பற்று எல்லா வகையிலும் பயன் தரும். இது இம்மையிலும் மறுமையிலும் நாம் வாழ்வு பெறுவோம் என்னும் வாக்குறுதியைக் கொண்டுள்ளது. இக்கூற்று உண்மையானது; எல்லாராலும் ஏற்றுக் கொள்ளத்தக்கது. வாழும் கடவுளை எதிர்நோக்கி இருப்பதால்தான் நாம் வருந்தி உழைத்து வருகின்றோம். அவரே எல்லாருக்கும், சிறப்பாக நம்பிக்கை கொண்டோருக்கும் மீட்பர்’ என்ற இப்பகுதி வாசிக்கப்பட்டபின், தன் கருத்துக்களை மக்களோடு பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நம் கிறிஸ்தவ எதிர்நோக்கிற்கு எதிராக இருப்பவைகளை எதிர்த்துப் போராட வேண்டியதன் தேவை குறித்து இன்று நாம் நோக்குவோம். பந்தோரா பெட்டியைத் திறந்தபோது, அதனுள் அடக்கி வைக்கப்பட்டிருந்த அனைத்து தீமைகளும் வெளியேறி உலகில் பரவின, ஆனால், தவறை உணர்ந்து அப்பெட்டியை அடைத்தபோது, நம்பிக்கை மட்டும் உள்ளே பூட்டப்பட்டுவிட்டது என பழைய கால 'பந்தோரா பெட்டி' என்ற கதை கூறுவதுபோல், இவ்வுலகில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அனைத்து தீமைகளையும் இறைபராமரிப்புடன் மனிதகுலம் எதிர்கொள்ள, நம்பிக்கை என்பது இன்னும் ஒரு புதையல் போல் உள்ளது. நாளை என்ற நாள் நல்லதாக விடியும் என்ற எண்ணத்துடன், தங்கள் சொந்த இடங்களை விட்டு வேறு இடம் தேடிச் செல்பவர்களுக்கும், அவர்களை வரவேற்பவர்களுக்கும் நம்பிக்கையே தூண்டுகோலாக இந்நாட்களில் உள்ளது. நம்பிக்கை அல்லது எதிர்நோக்கு என்பது, சிறப்பான விதத்தில் ஏழைகளின் நற்பண்பாக உள்ளது. கிறிஸ்து பிறப்பின் மறையுண்மை நமக்கு எடுத்துரைப்பதுபோல். நம் மீட்பின் நற்செய்தியை கொணர்வதற்காக நம்மிடையே வந்த இயேசு இவ்வுலகில் ஏழைகள் நடுவிலேயே வந்தார்.  நம்பிக்கை என்பது, இளையோரின் நற்பண்பும்கூட. ஆன்மீக நலனற்ற, மற்றும், உலகாயுதப் போக்கினைக்கொண்ட சமூகத்தினால், இந்த நம்பிக்கை, இளையோரிடமிருந்து பறிக்கப்படாமலிருக்க வேண்டும். ஆன்மீக வெற்றிடம் என்பதே நம்பிக்கையின் பெரிய எதிரி. சோம்பலையும், வெற்றிடத்தையும், மனத்தளர்ச்சியையும், ஏமாற்றத்தையும் பரிசாகத் தந்து, நம்மை முடங்க வைக்கும் தீயவன், நாம் நம் போராட்டங்களைக் கைவிட்டு, மனத்தளர்வுக்கு கையளிக்குமாறு நம்மைச் சோதிக்கிறான். வருங்காலத்தையும், அது நமக்கென கொணரவிருப்பவைகளையும் எதிர்நோக்கியிருக்கும் நாம், இறைவன் இவ்வுலகின் மீது கொண்ட வெற்றியால், நம் இதயங்கள் நிரப்பப்படும் என்ற உறுதிப்பாட்டுடன், இறைவனின் வாக்குறுதிகளில் முழுமையான நம்பிக்கை கொள்ளும் அருளை இறைவனிடம் இறைஞ்சுவோமாக.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதன் மறைக்கல்வி உரை நேரத்தில் குழுமியிருந்த இத்தாலிய காரித்தாஸ் அங்கத்தினர்கள் அனைவரையும் வாழ்த்தி, தன் ஊக்கத்தையும் வழங்கினார். புலம்பெயர்ந்தோரை, பல நாடுகளில் உள்ள சமுதாயங்கள் வரவேற்க வேண்டும் என்ற எண்ணத்துடன், "பயணத்தைப் பகிர்வோம்" என்ற தலைப்பில் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு திட்டமிட்டுள்ள உலகளாவிய முயற்சிக்கு தன் வாழ்த்துக்களை தனிப்பட்ட முறையில் வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.