2017-09-27 17:07:00

பாசமுள்ள பார்வையில்.. துணைவருக்கேற்ற துணைவியார்


திருவள்ளுவர் சாப்பிடும்போது, ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீரும், ஓர் ஊசியும் வைத்துக்கொண்டுதான் சாப்பிடுவாராம். அது ஏன் என்று அவரின் துணைவியார் வாசுகி அம்மையாருக்கு விளங்கவே இல்லை. ஆனால் அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று வாசுகி அம்மையார் நினைத்ததால், இதற்கு காரணத்தைக் கேட்கவில்லை. எனினும், வாசுகி அம்மையார் இறக்கும் தருவாயில்தான் இதற்குரிய காரணத்தை கேட்டாராம். அப்போது வள்ளுவர், அவை இரண்டும், சோற்றுப்பருக்கை கீழே சிந்தினால் ஊசியில் குத்தி கொட்டாங்குச்சியில் உள்ள நீரில் கழுவி மீண்டும் சோற்றில் கலந்து உண்ணவே. ஆனால், நீ பரிமாறுகையில் சோற்றுப்பருக்கை சிந்தவே இல்லை. அதனால் அதன் பயன்பாடு உனக்குத் தெரியவில்லை என்று நெகிழ்ச்சியாகச் சொன்னாராம். ஒருநாள் வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார். அவர்கள், இருவரும் பழைய சாதம் சாப்பிட்டனராம். அப்போது வள்ளுவர், தன் துணைவியாரிடம் சோறு சூடாக இருக்கிறது, விசிறு என்றார். பழைய சோறு எப்படி சுடும்? வாசுகி அம்மையார் கேள்வியே கேட்கவில்லையாம். விசிற ஆரம்பித்து விட்டாராம். இப்படி, கணவருடன் வாதம் செய்யாமல் விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் கொண்டிருந்தவர் வாசுகி அம்மையார். ஒருநாள் அந்த அம்மையார், கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தாராம். வள்ளுவர் அவரை அழைக்கவே, கயிறை அப்படியே விட்டுவிட்டு வந்தாராம். குடத்துடன்கூடிய அந்தக் கயிறு அப்படியே நின்றதாகச் சொல்லப்படுகிறது. இத்தகைய அன்பு மனைவி, காலமானபோது, ஊருக்கே புத்தி சொன்ன அந்தத் தெய்வப்புலவர், மனைவியின் பிரிவைத் தாங்காமல் கண்கலங்கி விட்டாராம்.

இன்று சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்குக்கூட நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர்

திருவள்ளுவர் வாசுகி தம்பதியர் பற்றி நினைத்துப் பார்க்கலாமே.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.