2017-09-23 17:24:00

ஆயுதங்களை கையளித்த மத்திய ஆப்ரிக்கப் போர் குழுக்கள்


செப்.23,2017. சான் எஜீதியோ (San Egidio) கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு, ஆப்ரிக்காவின் அமைதிக்காக எடுத்துவரும் முயற்சிகளின் விளைவாக, மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் இரு ஆயுதக் குழுக்கள், தங்கள் ஆயுதங்களைக் கையளித்துள்ளன.

மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் அரசு அதிகாரிகள், ஐ.நா. அவை உறுப்பினர்கள், மற்றும் சான் எஜீதியோ குழுவினர் முன், இரு குழுக்கள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து, அமைதி வழிக்குத் திரும்பியுள்ளன என்பது, அந்நாட்டின் அமைதிப் பாதையில் ஒரு முக்கிய மைல்கல் என்று, சான் எஜீதியோ குழுவினர் அறிவித்துள்ளனர்.

மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் இயங்கிவந்த ஆயுதம் தாங்கிய குழுக்கள் 13, இவ்வாண்டு ஜூன் மாதம் 19ம் தேதி, உரோம் நகரில், சான் எஜீதியோ அமைப்பின் முயற்சியால், ஆயுதங்களைக் கையளிப்பதாக ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இதைத் தொடர்ந்து, இதுவரை மூன்று குழுக்கள் தங்கள் ஆயுதங்களை கையளித்துள்ளதைத் தொடர்ந்து, ஏனைய 10 குழுக்களும் இதே வழியை விரைவில் பின்பற்றுவர் என்ற நம்பிக்கையை, அரசியல் வல்லுநர்கள் விடுத்துள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.