2017-09-21 15:53:00

'மாஃபியா' கும்பலுக்குப் பலியானவர்களை நினைத்துப் பார்க்கிறேன்


செப்.21,2017. இத்தாலியில், 'மாஃபியா' என்ற குற்றக்கும்பலுக்குப் பலியானவர்களை இன்று சிறப்பாக நினைத்துப் பார்க்க விழைகிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன்னைச் சந்திக்க வந்திருந்த சிறப்புக் குழுவிடம் கூறினார்.

1990ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி, நீதிபதியான இறையடியார், Rosario Livatinoவும், நீதிபதிகள், Giovanni Falcone மற்றும் Paolo Borsellino ஆகியோர், 'மாஃபியா' குற்றக்கும்பலால் கொல்லப்பட்டதன் நினைவைச் சிறப்பிக்கும் வகையில், 'மாஃபியா'வுக்கு எதிராக செயலாற்றும் இத்தாலிய பாராளுமன்ற உறுப்பினர்களை, சந்தித்த திருத்தந்தை, இவ்வாறு கூறினார்.

இந்த சந்திப்பு குறித்து தான் சிந்தித்த வேளையில், மாற்கு நற்செய்தியில் கூறப்பட்டுள்ள,  "மனிதருக்கு உள்ளேயிருந்து வருவதே அவர்களைத் தீட்டுப்படுத்தும். ஏனெனில் மனித உள்ளத்திலிருந்தே பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் வெளிவருகின்றன. தீயனவாகிய இவை அனைத்தும் உள்ளத்திலிருந்து வந்து மனிதரைத் தீட்டுப் படுத்துகின்றன" (மாற்கு 7:20-23) என்ற சொற்கள் தன் நினைவுக்கு வந்ததாக திருத்தந்தை குறிப்பிட்டார்.

எந்த ஒரு செயலுக்கும் மனித மனமே ஆரம்பமாக உள்ளது என்பதை வலியுறுத்திக் கூறியத் திருத்தந்தை, மனசாட்சியை மழுங்கச் செய்துவிட்டு, சுயநலத்தை முன்னிறுத்துவதால் இவ்வுலகில் இத்தனை துயரங்கள் பெருகியுள்ளன என்று கூறினார்.

உண்மையான அரசியல், பிறரன்பை, மக்களின் நலனை அடித்தளமாகக் கொண்டு இயங்கவேண்டும் என்று கூறியத் திருத்தந்தை, இந்தக் காரணத்தால், 'மாஃபியா'வுக்கு எதிராக மேற்கொள்ளும் முயற்சிகளை அரசு முன்னிலைப்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

'மாஃபியா' குற்றக்கும்பலை ஒழிப்பது மட்டும் நோக்கமாக இல்லாமல், அதற்கு அடுத்த நிலையில், அவர்களால் பாதிக்கப்பட்டோருக்கும், சமுதாயத்திற்கும் நன்மைகளை உருவாக்குவதும் அரசியல் தலைவர்களின் கடமை என்பதை திருத்தந்தை தன் உரையில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.