2017-09-21 16:11:00

புலம்பெயந்தோருக்காக திருத்தந்தை துவக்கிவைக்கும் முயற்சி


செப்.21,2017. புலம்பெயந்தோரை, பல நாடுகளில் உள்ள சமுதாயங்கள் வரவேற்க வேண்டும் என்ற எண்ணத்துடன், அகில உலக காரித்தாஸ் அமைப்பு திட்டமிட்டுள்ள உலகளாவிய ஒரு முயற்சியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 27, வருகிற புதனன்று உரோம் நகரில் துவக்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புலம் பெயர்ந்தோரைக் குறித்த முற்சார்பு எண்ணங்களை நீக்கிவிட்டு, அவர்களை வரவேற்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள இந்த முயற்சிக்கு, "பயணத்தைப் பகிர்வோம்" என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

புலம் பெயர்ந்தோரை நேருக்கு நேர் கண்களால் கண்டு, அவர்களது துன்பக் கதைகளைப் பகிர்ந்து, உதவிகள் செய்வதற்கு, இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று, அகில உலக காரித்தாஸ் அமைப்பின் தலைவர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் கூறினார்.

புலம் பெயர்ந்தோரை விரிந்த கரங்களுடன் வரவேற்க, மற்றவர்கள் காத்திருக்கும் தருணத்தில், மனித வர்த்தகம், நவீன அடிமைத்தனம் ஆகிய சமுதாயக் கொடுமைகளை அகற்ற வழிபிறக்கும் என்று, அகில உலக காரித்தாஸ் அமைப்பின் பொதுச் செயலர், மைக்கேல் ராய் அவர்கள் கூறினார்.

அடுத்த இரு ஆண்டுகளாக நிகழவிருக்கும் இந்த கொள்கைப்பரப்பு முயற்சியில், திருத்தந்தை அடிக்கடி வலியுறுத்தி வரும், சந்திக்கும் கலாச்சாரம் முன்னிறுத்தப்படும் என்றும், புலம்பெயர்ந்தோர் குறித்து விழிப்புணர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் காரித்தாஸ் அமைப்பு கூறியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.