2017-09-21 15:41:00

இறைவனின் இரக்கம் கத்தோலிக்கர்களை இடறல்பட வைத்துள்ளது


செப்.21,2017. பாவியாக இருப்பது, இயேசுவைச் சந்திப்பதற்கு ஏற்ற கதவாக அமைகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரை வழங்கினார்.

செப்டம்பர் 21, இவ்வியாழனன்று கொண்டாடப்பட்ட திருத்தூதர் மத்தேயுவின் திருநாளை மையப்படுத்தி மறையுரை வழங்கியத் திருத்தந்தை, மத்தேயுவின் அழைப்பைச் சித்தரிக்கும் ஓவியர் Caravaggio அவர்களின் ஓவியம், தன்னை வெகுவாகக் கவர்ந்தது என்பதையும் குறிப்பிட்டார்.

சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்த மத்தேயுவை இயேசு கூர்ந்து நோக்கி, 'என்னைப் பின்பற்றி வா' என்று அழைத்ததைப் பற்றி கூறப்பட்டுள்ள நற்செய்தியை மையப்படுத்தி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் பார்வை, கனிவு மிக்கதாக இருந்ததால், மத்தேயு அவரது அழைப்பை ஏற்க துணிந்தார் என்று குறிப்பிட்டார்.

இன்றைய நற்செய்தியில், சந்திப்பு, விருந்து, இடறல்படுதல் என்ற மூன்று அம்சங்கள் இடம்பெற்றுள்ளன என்று சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, பலமுறை, இறைவனின் இரக்கச் செயல்கள் கத்தோலிக்கர்களையும் இடறல்பட வைத்துள்ளன என்று குறிப்பிட்டார்.

இடறல்படுவோர், இறைவனின் இரக்கத்தைக் குறித்து கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தவே, இயேசு இன்றைய நற்செய்தியில், "'பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்' என்பதன் கருத்தை நீங்கள் போய் கற்றுக்கொள்ளுங்கள்" என்ற சொற்களை, நம் ஒவ்வொருவரிடமும் கூறுகிறார் என்று, திருத்தந்தை எடுத்துரைத்தார்.

மத்தேயுவின் அழைப்பை பற்றி ஓவியர் Caravaggio அவர்கள் வரைந்த ஓவியத்தை அடித்தளமாகக் கொண்டு, திருத்தந்தை தன் தலைமைப்பணியின் விருதுவாக்கான “Miserando atque eligendo” அதாவது, "இரக்கத்துடன் நோக்கி, தேர்ந்தெடுத்து" என்ற சொற்களைத் தெரிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.