2017-09-18 17:01:00

ரொஹிங்கியா குழந்தைகளுக்கு நோய் தடுப்பு மருந்துகள் வழங்குதல்


செப்.,18,2017. தட்டம்மை, இளம்பிள்ளைவாதம் மற்றும் மணல் வாரி நோய்களுக்கு எதிராக, ரொஹிங்கியா குழந்தைகளுக்கு நோய் தடுப்பு மருந்துக்கள் வழங்கும் திட்டம் யுனிசெஃப் அமைப்பின் உதவியுடன் துவக்கப்பட்டுள்ளது.

மியான்மாரிலிருந்து அடைக்கலம் தேடி பங்களாதேஷ் நாட்டிற்குள் புகுந்துள்ள ரொஹிங்கியா மக்களின் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் குழந்தைகளுக்கு நோய் தடுப்பு மருந்துக்களை வழங்கும் திட்டத்தை துவக்கியுள்ள பங்களாதேஷ் அரசு, அடைக்கலம் தேடியுள்ள ரொஹிங்கியா மக்களுள் 60 விழுக்காட்டினர் குழந்தைகள் என தெரிவிக்கிறது.

இடமாற்றங்களாலும் உணவு பற்றாக்குறையாலும் ஏற்கனவே பலவீனமடைந்துள்ள குழந்தைகளுக்கு, நோய் தடுப்பு மருந்துக்களை வழங்கும் திட்டத்தை, யுனிசெஃப், மற்றும், உலக நலவாழ்வு நிறுவனமான WHOவுடன் இணைந்து, பங்களாதேஷ் அரசின் நலவாழ்வு அமைச்சகம் செயல்படுத்தி வருகின்றது.

மியான்மாருக்கும் பங்களாதேஷுக்கும் இடைப்பட்ட எல்லையில், அகதிகளுக்கென 68 குடியிருப்புக்களை அமைத்துள்ள அரசு, தடுப்பு மருந்துக்களை வழங்குவதற்கு தேவையான மருத்துவர்கள், தாதியர்கள், உதவியாளர்கள், போதிய கட்டடங்கள் போன்றவற்றை வழங்கியும் உதவி வருகிறது.

ஒவ்வொரு நாளும் மியான்மாரிலிருந்து ஆயிரக்கணக்கான ரொஹிங்கியா அகதிகள் பங்களாதேஷ் நாட்டிற்குள் நுழைந்துவரும் நிலையில், அவர்களின் பராமரிப்பிற்கென, அடுத்த மூன்று மாதங்களுக்கு குறைந்தபட்சம் 73 இலட்சம் டாலர்கள் தேவைப்படும் என யுனிசெஃப் அமைப்பு அறிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.