2017-09-14 16:31:00

நிலம் பாலைநிலமாவதைத் தடுப்பது குறித்த கருத்தரங்கிற்கு செய்தி


நிலங்கள் பாலைநிலமாவதைத் தடுப்பது குறித்த கருத்தரங்கிற்கு செய்தி

 

செப்.14,2017. நிலங்கள் பாலைநிலமாவதைத் தடுப்பது குறித்து, சீனாவின் Ordos நகரில் நடைபெற்றுவரும் 13வது உலக மாநாட்டிற்கு, செபம் நிறைந்த வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இக்கலாத்தில் மனித சமுதாயம் எதிர்கொள்ளும் கடும் சுற்றுச்சூழல் நெருக்கடியை களைவதற்கென, ஒன்றிணைந்த ஒத்துழைப்பு முயற்சிகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில் நடைபெற்றுவரும் இம்மாநாட்டிற்குத் தன் பாராட்டுதல்களைத் தெரிவித்துள்ள திருத்தந்தை, இவ்விவகாரத்தில் உலகளாவிய சமுதாயம் எடுத்துள்ள தீர்மானங்களை, அனைவரும் அமல்படுத்துவார்கள் என்ற தன் நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார்.

திருத்தந்தையின் சார்பில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கையெழுத்திட்டுள்ள இச்செய்தியை, திருப்பீடத்தின் சார்பில் இம்மாநாட்டில் பங்குகெடுக்கும், ஜப்பான் திருப்பீடத் தூதர் பேராயர் ஜோசப் சென்னாத் அவர்கள் வாசித்தார்.

நிலங்கள் பாலைநிலமாவதோடு தொடர்புடைய அறநெறி விவகாரங்களான, ஏழ்மை, வளர்ச்சிக்குறைவு, உலகளாவிய சமுதாயத்தின் ஆன்மீக மற்றும் நன்னெறி வாழ்வுச் சிதைவு போன்றவைகளைக் குறிப்பிட்டு, இப்பிரச்சனைகள் தீர்க்கப்படுவதற்கு ஒருங்கிணைந்த அணுகுமுறையை இம்மாநாடு ஊக்குவிக்கும் என்ற, திருத்தந்தையின் நம்பிக்கையும், இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

Ordos நகரில் செப்டம்பர் 6ம் தேதியன்று தொடங்கிய, நிலங்கள் பாலைநிலமாவதைத் தடுப்பது குறித்த 13வது உலக மாநாடு, செப்டம்பர் 16, வருகிற சனிக்கிழமையன்று நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.